வன்னியர் சங்கத்தின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மே மாதம் 25ஆம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் காடுவெட்டியிலுள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பம் வன்னியர் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் குருவின் முழு உருவச் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தன.

குருவின் சிலை நாளை  திறந்துவைக்கப்படவுள்ள நிலையில், நிகழ்வில் கலந்துகொள்ள வரும் பாமக தொண்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் குருவின் முழு உருவச் சிலையை  ராமதாஸ் திறந்து வைக்க உள்ளார். குருவின் பெயர் சூட்டப்பட்ட சட்டக்கல்லூரி வளாகத்தை  அன்புமணி  திறந்து வைக்கவுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிலைத் திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் சிலைத் திறப்பு நிகழ்ச்சி வெற்றி பெறுவது நமது சொந்தங்களாகிய உங்கள் கைகளில் தான் உள்ளது” என்று பாமக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மணி, சிலைத் திறப்பு நிகழ்ச்சிக்கு வரும் பாமகவினர் அனைவரும் தாங்கள் புறப்படும் இடத்தில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் வந்து செல்ல வேண்டும். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வாகனம் கூட நிறுத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

நிகழ்ச்சிக்காக எவ்வளவு வாகனங்கள் வந்தாலும் அவற்றை நிறுத்த வன்னியர் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் இடம் உள்ளது. எனவே நிகழ்ச்சிக்கு வரும் அனைவரும் அறக்கட்டளை வளாகத்திற்குள் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் அனைவரும் முழுமையான ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டை கடைபிடித்து சிலை திறப்பு நிகழ்வை வெற்றியுடன் நடத்தித் தர வேண்டும்” என்றும் மணி கேட்டுக்கொண்டுள்ளார்.