தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு கிட்டத்தட்ட அரசியல் துறவரம் மேற்கொண்டிருந்த வானதி சீனிவாசனுக்கு அகில இந்திய அளவில் மிக முக்கியமான பதவியை அளித்துள்ளது பாஜக.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக பாஜகவின் முகங்களாக இருந்தவர்கள் தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் தான். இவர்களில் தமிழிசை மாநில தலைவராக இருந்த நிலையில் வானதி சீனிவாசன் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தார். ஆனால் இருவருமே பாஜகவிற்காக தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்றனர். பாஜகவிற்கு ஆதரவாக தமிழிசை – வானதி என இருவருமே டிவி விவாதங்களில் கலந்து கொண்டு எதிர்கட்சியினருக்கு சுடச்சுட பதிலடி கொடுப்பர்.

தமிழிசை சவுந்திரராஜனின் மாநில தலைவர் பதவி மீது வானதிக்கு எப்போதுமே ஒரு கண் உண்டு. தமிழிசை அந்த பதவியில் இருக்கும் போது தலைவர் பதவியை குறி வைத்து வானதி காய் நகர்த்தி வந்தார். ஆனால் இந்த மோதலில் வானதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். ஆனால் தமிழிசைக்கு பாஜக தலைவராக இருந்த அமித் ஷாவின் ஆசி எப்போதுமே இருந்தது. இதனால் தமிழிசை சவுந்திரராஜனிடம் இருந்து மாநில தலைவர் பதவியை வானதியில் பறிக்க முடியவில்லை.

இதற்கிடையே திடீரென யாரும் எதிர்பாராத வகையில் தமிழிசையை தெலுங்கானா மாநில ஆளுநராக தேர்வு செய்தார் அமித் ஷா. இந்த அறிவிப்பு தமிழக பாஜகவில் பலருக்கு அதிர்ச்சி வைத்தியமாக இருந்தது. அதிலும் வானதி சீனிவாசனால் தமிழிசையின் இந்த திடீர் பதவி உயர்வை ஜீரனித்துக் கொள்ள முடியவில்லை. இதன் பிறகு அவர் சென்னை வருவதையே தவிர்க்க ஆரம்பித்தார். கோவையில் மட்டுமே கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். எதிர்கட்சிகளை கடுமையாக தாக்கிப் பேசுவதையும் குறைத்துக் கொண்டார்.

கடந்த ஓராண்டாகவே வானதியை டிவி விவாதங்களில் பெரிய அளவில் பார்க்க முடியவில்லை. இதற்கு காரணம் தனக்கு கிடைக்காத அங்கீகாரம் தமிழிசைக்கு கிடைத்துவிட்டதாகவும் தமிழிசையை விட தான் கடுமையாக உழைத்ததாகவும் அவர் நம்பினார். இதனால் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக கிட்டத்திட்ட அரசியலில் இருந்தே ஒதுங்கியிருந்தவர் போன்று வானதி காணப்பட்டார். இதற்கிடையே அவர் மீது சில முறைகேடு புகார்களையும் கூறினர். இதானல் ஏற்பட்ட மனவேதனையால் பாஜக நிகழ்ச்சிகளில் அவர் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை.

இந்த நிலையில் திடீரென அகில இந்திய பாஜகவின் மகளிர் பிரிவு தலைவியாக வானதியை அக்கட்சியின் தலைவர் நட்டா நியமித்துள்ளார். இது மிகுந்த அதிகாரம் மிக்க பதவியாகும். நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வேட்பாளர் தேர்வு தொடங்கி ஏன் அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் கொடுப்பது வரை வானதியின் பார்வைக்கு பல்வேறு தகவல்கள் வரும். இப்படி ஒரு மிகப்பெரிய பதவி வானதியை தேடி வந்ததன் பின்னணியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருப்பதாக கூறுகிறார்கள்.

நிர்மலா சீதாராமன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் அவருக்காக பல்வேறு அரசியல் சார்ந்த விஷயங்களை முன்னின்று வானதி சீனிவாசன் செய்து கொடுத்ததாக கூறுகிறார்கள். மேலும் தமிழகத்தில் ஊடக அதிபர்கள், எடிட்டர்களோடு நிர்மலா சீதாராமன் தரப்பிற்கு நெருக்கத்தை ஏற்படுத்தியதும் வானதி தான் என்கிறார்கள். இப்படி ஒரு காலத்தில் வானதி செய்த உதவிக்கு பிரதிபலனாகவும் தன்னுடைய ஆதரவாளர் ஒருவர் உயர் பதவிக்கு வரட்டும் என்றும் அவருக்கு இப்படி ஒரு பதவியை பெற்றுக் கொடுத்ததில் நிர்மலா சீதாராமன் தலையீடு இருந்தாக கூறுகிறார்கள்.