இதற்கு முன் பல நடிகர்கள் அரசியலுக்கு மிக வேகமாக வந்து, வந்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டனர். அவர்கள் பெயரைக்கூட நான் சொல்ல விரும்பவில்லை என முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் விரைவில் தன்னுடைய கட்சியை அறிவிப்பார் , தற்போது அவர் கமிட் செய்துள் இரண்டு படங்களை விரைவில் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு துவக்கத்தில் முழுநேர அரசியலில் தீவிரம் காட்ட உள்ளார், அவர் கட்சியை ஆரம்பித்து தேர்தலில் இறங்கிவிட்டால் கோட்டையில் ரஜினி கொடி தான் பறக்கும். அவர்தான் தமிழகத்தின் நாளைய முதல்வர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என காங்கிரசிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் தொண்டை தண்ணி வற்றிப்போகும் அளவிற்கு ஒப்பாரி வைத்து வருகிறார்.

கராத்தே தியாகராஜன் அண்டப்புளுகு  அறிக்கையையும், அப்பட்டமான புருடா பேட்டியையும் பார்க்கும் போது, அரசியல் தலைவர்களுக்கு மட்டுமல்ல ரஜினியின் ரசிகர்களே என்னடா கட்சியில சேரவே இல்ல அதுக்கு முன்னாடியே இப்புடி கூவுறாரே மனுஷன் என வெறுப்பாகியுள்ளனர்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த வளர்மதி, ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ‘ரஜினி ஒரு சிறந்த நடிகர், நல்ல மனிதர். அவர் அரசியலுக்கு வரட்டும். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர் அரசியலுக்கு வருவதை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம்.

ஆனால், ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்து, மக்களையும் தேர்தலையும் சந்தித்த பின்னரே அவருக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு தெரிய வரும். இப்போது அவருடைய செல்வாக்கு என்னன்னு சொல்ல முடியாது, இதற்கு முன்னாள் பல நடிகர்கள் அரசியலுக்கு மிக வேகமாக வந்து, வந்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டனர். அவர்கள் பெயரைக்கூட நான் சொல்ல விரும்பவில்லை. எங்களை பொருத்தவரை அதிமுகவுக்கு எதிரிக்கட்சி திமுக மட்டுமே. தேர்தல் அரசியலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி என்று கூறினார்.