2002-ல் குஜராத்தில்  நடந்த கலவரங்களைத் தொடர்ந்து  நரேந்திர மோடி தலைமையிலான அரசை கலைக்க அப்போதைய பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்தார் யஷ்வந்த் சின்ஹா. அப்போது அவர், “2002-ல் குஜராத்தில் மதக் கலவரங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பதவியிலிருந்து நீக்க அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் முடிவெடுத்தார். ஒரு வேளை அவர் பதவி விலக மறுத்தால், ஆட்சியைக் கலைக்கவும் முடிவு செய்திருந்தார். 2002-ல் கோவா பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்துக்கு போகும் முன்பு இதுபற்றி வாஜ்பாய் முடிவு செய்திருந்தார்.


இது பற்றி விவாதிக்க கட்சிக்குள் மூத்த தலைவர்கள் பங்கேற்ற கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மோடியை பதவியிலிருந்து நீக்கவும், அவருடைய ஆட்சியைக் கலைக்கவும் அத்வானி எதிர்ப்பு தெரிவித்தார். மோடி பதவியிலிருந்து நீக்கினால், தானும் பதவி விலகுவதாக அத்வானி வாஜ்பாயிடம் தெரிவித்தார். இந்த முட்டுக்கட்டையால் வாஜ்பாய் தனது முடிவை மாற்றிக்கொண்டார். நரேந்திர மோடியும் குஜராத் முதல்வராக தொடர்ந்தார்”  என்று யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.


மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சொகுசு பயணத்துக்கு ஐஎன்எஸ் போர்க்கப்பலை பயன்படுத்தியதாக பிரதமர் மோடி சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த யஷ்வந்த சின்ஹா, “இந்த விவகாரம் பற்றி முன்னாள் கடற்படை தளபதி விளக்கம் அளித்திருக்கிறாரே. பிரதமர் என்ற உயர் பொறுப்பில் உள்ளவர், இதுபோன்ற பொய்களைப் பேசக் கூடாது.” என்று பதில் அளித்தார்.