ராஜ்ய சபா எம்.பிகளாக தமிழகத்தை சேர்ந்த வைகோ உள்ளிட்ட 6 பேர் இன்று நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக் கொண்டனர். 

திமுகவை சேர்ந்த வில்சன், சண்முகம், கூட்டணி கட்சியான மதிமுகவை சேர்ந்த வைகோ ஆகியோரும், அதிமுகவை சேர்ந்த முகமது ஜான், சந்திரசேகர், பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக வெங்கையா நாயுடு முன் பதவி ஏற்றுக் கொண்டனர்.

மக்களவையிள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பதவியேற்கும்போது பெரியார் வாழ்க, தமிழ் வாழ்க என கோஷங்களை எழுப்பினர். அதற்கு பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுகவை சேர்ந்த ஓ.பி.எஸ் மகன் ரவீந்திர நாத் பதவியேற்கும்போது ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டார். அதற்கு பாஜகவினர் பாராட்டு தெரிவித்தனர். 

அதேபோல் மாநிலங்களவையில் திமுகவினர் பதவியேற்கும் போது சுவாரஸ்ய நிகழ்வு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது, காரணம் நாடாளுமன்ற டைகராக வர்ணிக்கப்படும் வைகோ 23 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்திற்குள் எம்.பியாக பதவியேற்றுக் கொள்கிறார். ஆனால் அப்படி எந்த ஒரு சுவாரஸ்யமும் அவர்கள் பதவியேற்கும்போது நடைபெறவில்லை. தமிழில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு வெங்கையா நாயுடுவுடன் கைகுலுக்கி விட்டு இருக்கைக்கு போய் அமர்ந்து விட்டனர். 

மக்களவையை போல மாநிலங்களவையிலும் பெரியார் கோஷத்தை திமுக எம்.பிகள் கிளப்புவார்கள் என எதிர்பார்த்த திமுகவினர் ஏமாற்றமடைந்து உள்ளனர்.