Asianet News Tamil

" ராசி இல்லாதவர் " சென்டிமெண்டை உடைத்து தகர்த்தெறிந்த வைகோ..

எந்த வைகோ ராசி இல்லாதவர், சென்டிமெண்ட் இல்லாதவர் என்று விமர்சிக்கப்பட்டாரோ அந்த வைகோ மதிமுக என்றும் மறு மலர்ச்சி திமுகவை உன்மையிலேயே மீண்டும் மறுமலர்ச்சியடைய வைத்துள்ளார். 

Vaiko who broke the sentiment of "no zodiac sign" ..vaiko Achieved .
Author
Chennai, First Published May 2, 2021, 6:29 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

செந்தமிழ்க்குத் தீங்கெனில் முழங்கி எழும் சிங்கக்குரல்... பைந்தமிழ் நலனைப் பாரெங்கும் பரப்பும் செஞ்சொற்கொண்டல்... முந்தையோர் பெருமை போற்றிப் பரவும் தொண்டில் முதல்வன் என்ற வரிகளுக்கு முற்றிலும் சொந்தமானவர் தமிழகத்தில் தற்போது ஒருவர் உண்டெனில் அது தமிழர் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் வையாபுரி கோபால்சாமி எனப்படும் வைகோவாகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு தமிழுக்கும் தமிழருக்கும் அரணாக இருந்து அரசியல் தொண்டாற்றி வருகிறார் வைகோ. மொத்தமாக தன்னை தமிழினத்திற்கே அற்பணித்துக் கொண்ட அந்த தலைவரின் பெருமைகளை அரசியல் அரிச்சுவடி கூட அறியாத மீம்ஸ் இளசுகள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. தமிழருக்காக ரத்தமும் சதையுமாக துடிக்கும் அந்த தலைவரையும் போகிற போக்கில் கிண்டல் அடித்து கடக்கும் கலாச்சாரம் தலைதூக்கி இருப்பது தமிழகத்தின் போதாத காலம் என்று புலம்புவதை தவிற நமக்கு வேறு வழியில்லை.  

எப்போதும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பது வைகோவுக்கு நிகர் வைகோ மட்டும்தான். தமிழருக்கு ஒரு இன்னல் என்றால் அங்கு முதல் ஆளாய் கர்ஜிப்பவர் வைகோவாகத்தான் இருக்கும். தமிழுக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும் அவர் நடத்திய போராட்டங்களுக்கு கணக்கே இல்லை. அவர் நடத்திய போராட்டங்கள் எண்ணில் அடங்காதவை. அதற்காக அவர் சந்தித்த வழக்குகள் ஏராளம். மொத்தத்தில் அரசியலில் வைகோ சந்திக்காத, சாதிக்காத விஷயங்களே இல்லை என்றே கூறலாம். முல்லைப் பெரியாறு அணை போராட்டம், கூடங்குளம் அணுஉலை போராட்டம், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம், தமிழகத்திற்கு காவிரி நதிநீர் உரிமை பெறுவதற்கான போராட்டம், மது ஒழிப்பு போராட்டம், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம்,  7 தமிழர் விடுதலை போராட்டம், என அவர் நடத்திய போராட்டங்களின் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அவர் நடத்திய  போராட்டம்தான் இன்று அந்த நாசகார நச்சுப்புகை ஆலை இழுத்து மூடப்பட்டதற்கு காரணம் என்று சொன்னால் மிகையல்ல. ஆனால் வைகோ கோடிக்கணக்கில் ஆலையிடம் பணம் வாக்கிக் கொண்டு நாடகமாடுகிறார் என அவர் மீது பொய் பிரச்சாரம் செய்யப்பட்டது. அவர் அத்துடன் ஓய்ந்துவிடவில்லை பழிசுமத்திய இந்த தமிழ் சமூகத்திற்காக இன்னும் தீரமுடன் போராடினார். கடைசி வரை நின்று அந்த ஆலையை இழுத்துமூடும் வரை களத்தில் நின்று போராடிய அவர் தன் அப்பழுக்கற்ற அரசியலை இந்த பழிபேசிய சமூகத்திற்கு நிரூபித்து காட்டினார். ஆனால் வைகோ கொஞ்சம் மாற்றி யோசித்திருந்தால் பல கோடி ரூபாயை வாங்கிக்கொண்டு சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து இருக்கலாம், ஆனால் அவர் கொள்கைக்காரர் அவ்வளவு எளிதில் வைகோவை வாங்கிவிட முடியுமா என்ன.? அவர் அந்த ஆலைக்கு எதிராக நடத்திய சமர் அவ்வளவு சாமானியமானது அல்ல அது ஒரு தவம். அரசியலுக்கு வருவது சம்பாதிக்க என்று எண்ணுபவர்கள் மத்தியில் தன் சொத்துக்களை அரசியலுக்காகவே தியாகம் செய்தவர் வைகோ. உலகில் எந்த மூலையில் தமிழன் அடிபட்டாலும், அதற்காக துடிக்கும் ஒரு தலைவர் உண்டென்றால் அது வைகோதான்.

தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா வழியில் தனது சுயமரியாதைக்கு பங்கம் என்று ஒன்று வந்தால் அதை இம்மியளவும் சகித்துக் கொள்ளாத தலைவர் வைகோ. காசுக்காக கொள்கையை சமரசம் செய்து கொள்ளாதவர் என்ற புகழ் அவருக்கு சாலப் பொருத்தம். இன்று தமிழகத்தில் ஈழ விடுதலை போர் குறித்தும்,  புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்தும் இந்த அளவிற்கு விழிப்புணர்வும், உணர்வும் ஏற்பட்டிருக்கிறது என்றால் அது வைகோ என்ற கொள்கை போராளி தூவிய விதை என்றால் மறுப்பதற்கில்லை. அவரின் பேச்சு அரசியல் நகர்வுகள் ஒவ்வொன்றும் தமிழகத்தை ஆட்சி செய்வதற்கான அத்தனை தகுதியும் கொண்டது. ஆனால் எளிதில் உணர்ச்சிவசப் கூடிய தலைவராகவே வைகோ அறியப்படுகிறார். திமுகவுடன் கருத்துவேறுபாடு, அதிமுகவுடன் வாக்குவாதம் என வைகோவின் கடந்தகால அரசியல் நகர்வுகள் இதுவரை புரியாத  புதிர் என்றே கூறலாம். 

கடந்த தேர்தல்களில் அவர் எடுத்த முடிவுகள் அவருக்கு மிகப் பெரிய சறுக்கலாக அமைந்தது. அவரை நம்பி இருந்த கட்சியினர் ஒவ்வொருவராக அவரை கைகழுவிவிட்டு கட்சியில் இருந்து வெளியேறினர். கடந்த தேர்தலில் மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் வைகோ தேர்தலை சந்தித்து அதில் தோல்வி அடைந்தார் அது  கட்சி தொண்டர்களை மேலும் பலவீனப்படுத்தியது. அப்போதிலிருந்து வைகோ மீது அரசியல் மற்றும் சமூக தளத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருவதை பார்க்க முடிகிறது. 

கடந்த 40 ஆண்டுகளாக அரசியலில் தான்கொண்ட  தமிழ் தேசிய சித்தாந்தத்தில் அவர் எவ்வளவு தீவிரமானவர் என்பதை அனைவரும் அறிவர். கொள்கையை விட பதவி முக்கியம் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் எந்த தலைவரும் செய்ய இயலாத செயலாக தனக்கு கிடைத்த மத்திய அமைச்சர் வாய்ப்பையும் துச்சமாக தூக்கி எறிந்தாவர் வைகோ. அதேபோல விருதுநகர் தொகுதியை சாதாரண தொண்டராக இருந்த சிப்பிப்பாறை ரவிச்சந்திரனுக்கு விட்டுக்கொடுத்து அவரை எம்பி ஆக்கினார் என்பதே வைகோவின் தாராள குணத்திற்கு நல்ல எடுத்துகாட்டு. தான் எந்த பதவியிலும் இல்லாத போதும் தனக்காக பதவி கேட்காமல் தன் கட்சியை சேர்ந்த பொள்ளாச்சி கிருஷ்ணன், செஞ்சி ராமச்சந்திரன், ஈரோட்டில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள கணேசமூர்த்தி ஆகியோரை எம்.பியாகவும், மத்திய அமைச்சராகவும் ஆக்கி அழகு பார்த்தவர் வைகோ. இப்படி பதவி மீது ஆசை காட்டாத வைகோ தான் பின்னாளில் ராசி இல்லாதவர் சென்டிமென்ட் இல்லாதவர் என்று பல மீம்ஸ் கிரியேட்டர்களால் சித்தரிக்கப்பட்டார். 

ஆனால் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில்  திமுகவுடன் கூட்டணி வைத்த வைகோ, திமுக கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபட்டார். மதிமுகவை சேர்ந்த கணேசமூர்த்தி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியும் ஆனார், வைகோ மாநிலங்களவை எம்.பியாக பதிவி வகித்து வருகிறார். அதேபோல் அவர் திமுக கூட்டணியில் இடம்பெற்றபோது நிச்சயம் தம்பி ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் அமர வைக்கும்வரை ஓயமாட்டேன் என முழங்கினார். அதேபோல நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் பெற்றார். அதில் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் வைகோ திமுக, கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார்.
திமுக கூட்டணியை தோற்கடிக்க வைகோ ஒருவர் போதும் என்று எதிர்க்கட்சிகள் அவரை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் வைகோ சொன்னதைப் போலவே இந்த  தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. 

மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 இடங்களில் 4 இடங்களில் மதிமுக முன்னிலை பெற்றுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் நான்கு மதிமுக உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் நுழைய உள்ளனர்.  எந்த வைகோ ராசி இல்லாதவர், சென்டிமென்ட் இல்லாதவர் என்று விமர்சிக்கப்பட்டாரோ அந்த வைகோ மதிமுக என்றும் மறு மலர்ச்சி திமுகவை உன்மையிலேயே மீண்டும் மறுமலர்ச்சியடைய வைத்துள்ளார். தனது சாமர்த்தியத்தால் சென்டிமென்ட் , ராசி இல்லாதவர் போன்ற விமர்சனங்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்து தன் அரசியல் திறனையும், நேர்மையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கிறார் வைகோ என்றால் அது மிகையல்ல.
 

Follow Us:
Download App:
  • android
  • ios