கருணாநிதியின் கண்ணசைவை  ஏற்று,  தி.மு.க.வின் எழுச்சிக்காக அரசியல் களமாடியவர் வைகோ. அரசியல் விவேகமும், எதற்கும் அஞ்சா தீரமும் கொண்ட வைகோவை ‘கருணாநிதியின் போர்வாள்’ என்று அழைத்தனர் திராவிட கட்சிகள். இதை பெரிதும் ரசித்தார் வைகோ. அதன் பின் அதே கருணாநிதியிடம் மனஸ்தாபம் கொண்டு, பிரிந்து வந்து தனிக்கட்சி துவக்கினார். 

துவக்கத்தில் சிறிய வெற்றிகளையும், நாளடைவில் பெரும் சரிவுகளையும் சந்தித்தார். ஆனாலும் கூட ‘தியாக இயக்கம்! தியாக தலைவர்!’ என்று மக்களின் போற்றுதல்களை அவரும், அவரது கட்சியும் பெற்றன. அப்பேர்ப்பட்ட வைகோ கடந்த நாடாளுமன்ற தேர்தலில், கருணாநிதி இல்லாத சூழலில் ஸ்டாலின் தலைமையை ஏற்று அக்கூட்டணியில்  கலந்தார். வெற்றி உறுதி! என்றாலுமே கூட இதனை அவரது கட்சி தொண்டர்கள் விரும்பவில்லை. ஆனாலும் தலைவனின் சொல்லை கேட்டே பழகிவிட்டவர்கள், எதிர்க்கவில்லை. 

இந்த நிலையில் தி.மு.க.வின் தயவில் மேல்சபை, கீழ் சபை இரண்டிலும் தலா ஒன்று என்று நாடாளுமன்றத்தில் ம.தி.மு.க.வுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்துவிட்டது. இதனால் தி.மு.க.வை மிகவும் நெருங்கி, தழுவி நிற்கிறார் வைகோ. இந்த நிலையில் வருடாவருடம் செப்டம்பர் 15-ம் தேதியன்று தன் கட்சி சார்பில் நடத்தும் அண்ணா நூற்றாண்டு விழாவை வேறு இந்த வருடம் ஸ்டாலினின் வசதிக்காக சென்னையில் நடத்தியதாக அவரது கட்சிக்குள்ளேயே ஒரு புகைச்சல் எழுந்தது. 
புகைச்சல் பெரும் தீயாக உருவெடுக்கும் வண்ணம் அந்த நிகழ்வில் ஸ்டாலின் பேசிவிட்டதுதான் ஹைலைட்டு. 

அதாவது அம்மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய ஸ்டாலின் “நம் போராட்டங்களின் முன்னணி போர்வாள் வைகோ. திராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோதான். நீர் அடித்து நீர் விலகாமல் இன்று ஒன்றாகி இருக்கிறோம். கருணாநிதிக்கு கொடுத்த வாக்கின் படி தி.மு.க.வுக்கு பக்கபலமாகி இருக்கிறார் வைகோ.” என்றார். 

இதைக் கேட்டு வைகோவுக்கு நெகிழ்ச்சி, ஆனால் அவரது கட்சியினருக்கோ வெறுப்புதான் மிஞ்சியது. ஏன் என்று அவர்களிடமே கேட்டால் “கருணாநிதியை எதிர்த்து விட்டுதான் இக்கட்சியை தலைவர் துவக்கினார். அவரது செயல் சரி என்று நாங்களும் அவர் பின்னால் வந்தோம். ஆனால் இன்று மீண்டும் தி.மு.க.வின் பின்னால் சென்று, ‘ம.தி.மு.க. என்றால் மறுபடியும் தி.மு.க.’ என்று கருணாநிதி அடித்த கிண்டலை நிரூபணம் செய்துவிட்டார். இதற்காகவா இத்தனை போராட்டங்கள், ஆவேசங்கள், தியாகங்கள்? தலைவரின் கோபத்தால் நாங்கள் எவ்வளவோ வளர்ச்சி வாய்ப்புகளை இழந்து நிற்கின்றோம். இவரது எமோஷனல் நடவடிக்கைகளால் தி.மு.க.வும் கடந்த முறை ஆட்சியை இழந்தது. 

இப்படி தன் இஷ்டத்துக்கு செயல்பட்டவர் இப்போது ஸ்டாலினை தழுவி நிற்கிறார். எந்த ஸ்டாலினுக்காக தனது இருப்பிடம் தி.மு.க.வில் காலியாகி, வெளியேற்றப்பட்டோமோ அதே ஸ்டாலினிடம் கட்சியை விட்டே கொடுத்துவிடுவார் போல. ஸ்டாலின் இவரை தன் போர்வாளாக ஜாடை மாடையாக சொல்லிவிட்டார்.  ஆனால் வருத்தமேயில்லை அவருக்கு. அன்று கருணாநிதியின், இன்று ஸ்டாலினின் அப்படியானால் நாளை உதயநிதியின் கையிலா எங்கள் தலைவர்?” என்கிறார்கள். 

புயல் கடல் கடந்து கரைகடந்து விடாமல் சற்றே யோசிக்க வேண்டும் இந்த கருத்துக்களை!