சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார். அதன் பிறகு இலங்கையில் அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த 2009 ம் ஆண்டு நடைபெற்ற புலிகளுடனான இறுதிக்கட்ட போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தின் கைகளில் இலங்கை ஆட்சி சென்றிருப்பதால் அங்கிருக்கும் தமிழர்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய ராணுவத்தினரை பாதுகாப்பில் நிறுத்தி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதனிடையே புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் கோத்தபய ராஜபக்சவிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அவரை இந்தியா வருமாறு அழைத்துள்ளார். அதை ஏற்று வரும் 29ம் தேதி இலங்கை அதிபர் இந்தியா வருகிறார். இது தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இலங்கை அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருப்பு கொடி போராட்டம் அறிவித்துள்ளார்.

நவம்பா் 28ம் தேதி காலையில் புதுதில்லி ஜந்தா் மந்தரில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் மதிமுகவினர், ஈழத்தமிழ் உணா்வாளா்கள் பெருந்திரளாக பங்கேற்க இருப்பதாக அக்கட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 2014 ம் ஆண்டு மோடி பதவி ஏற்பு விழாவிற்கு வருகை தந்த மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக வைகோ கருப்பு கொடி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.