vaiko statement about genetically changed mustard
இந்தியாவின் மரபு வகை உணவுப் பயிர்களின் உற்பத்தியை அழித்துவிட்டு, மரபணு மாற்று கடுகு உள்ளிட்ட எந்தவித உணவுப் பயிர்கள் உற்பத்திக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் மரபணு மாற்று கடுகு பயிரிடுவதற்கு, மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு மே 11 ஆம் தேதி அனுமதி அளித்து, மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்பி உள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
மரபணு மாற்று கடுகு சாகுபடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு, 25 அக்டோபர் 2016 ல் விசாரணைக்கு வந்தபோது, மரபணு மாற்று கடுகு வர்த்தக அனுமதிக்கு தடை விதித்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே மரபணு மாற்று கடுகு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
மரபணு மாற்று பி.டி.கத்திரிக்காய் சாகுபடிக்கு 2010 இல் மத்திய அரசு அனுமதி அளித்தபோது, எழுந்த கடும் எதிர்ப்புகளால் பி.டி.கத்தரி ஆராய்ச்சிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
தற்போது மரபணு மாற்று கடுகு உற்பத்திக்கு அனுமதி அளிப்பதன் மூலம் முதல் முறையாக உணவுப் பயிருக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க முடிவு செய்துள்ளன.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா? என்று உண்மையான ஆய்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை.
வேளாண்மைத்துறை என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளபோது, மாநில உரிமைகளை நசுக்கும் வகையில் மத்திய அரசு முடிவுகளைத் திணிப்பதை ஏற்க முடியாது.
எனவே, இந்தியாவின் மரபு வகை மண்ணுக்கு ஏற்ற உணவுப் பயிர்கள் உற்பத்தியை அழித்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு ஊக்கம் அளிக்கும் மரபணு மாற்று கடுகு உள்ளிட்ட எந்தவித உணவுப் பயிர்கள் உற்பத்திக்கும், வர்த்தக பயன்பாட்டுக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
