பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் அமைச்சரவைக் கூட்டம் எப்படி நடத்த முடிந்தது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்கள் வினியோகிக்க தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் ஏப்ரல் 15ம் தேதி  கூட்டப்படுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.  இந்தக் கூட்டம் தொடர்பாக திமுக சார்பில் காவல்துறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில் திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு  காவல்துறை நேற்று மாலை அனுமதி மறுத்தது. நேரடியாகக் கூட்டத்தைக் கூட்டாமல் காணொளிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தும்படி போலீஸ் அறிவுறுத்தியது. ஏப்ரல் 30 வரை கூட்டம் கூடுவதற்கு தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள தடையைக் காரணம் காட்டியும் போலீஸ் அனுமதி மறுத்துள்ளதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்துக் கட்சி கூட்டம் ஏப்ரல் 16 அன்று காணொளி காட்சி மூலம் நடைபெறும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.


இதற்கிடையே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி மறுத்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகள் கூட்டத்துக்கு தடையா? பிரதமர் நரேந்திர மோடி எப்படி அமைச்சர்களின் கூட்டத்தை நடத்தினார்? முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் எப்படி நடத்த முடிந்தது? இந்தியாவின் பல மாநிலங்களில் முதலமைச்சர்கள் கூட்டம் நடத்துகிறார்களே, தமிழ் நாட்டில் நடப்பது பாசிச ஆட்சியா, சர்வாதிகார ஆட்சியா? எந்த அடக்குமுறையும் சந்திக்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள் நாங்கள் என்பதை நிரூபிப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.