காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு குறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி இறுதி தீர்ப்பில், தமிழகத்திற்கான நீர் பங்கை 192 டிஎம்சியிலிருந்து 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. பெங்களூரு மாநகரின் நீர் தேவைக்காக கர்நாடகாவிற்கு கூடுதலாக 14.75 டிஎம்சி வழங்குவதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் அதிகமாக இருப்பதால் அதை முறைப்படுத்தி பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், நிலத்தடி நீர் மட்டத்தை காரணம் காட்டி தமிழகத்திற்கான நீர் பங்கீட்டை குறைத்தது. இதுதான் இப்படியென்றால், தமிழகத்தின் நீண்டகால கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை கூட தீர்ப்பில் தெளிவாக கூறவில்லை உச்சநீதிமன்றம்.

தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் என குறிப்பிடாமல், காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தை மேலாண்மை செய்ய திட்டம் வகுக்க வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்ப்பின் அந்த பகுதியை சுட்டிக்காட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில், இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வைகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வைகோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற நேரடி உத்தரவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏன் பிறப்பிக்கவில்லை? திட்டம் என்ற வார்த்தையை சூட்சமமாக கூறியுள்ளது நீதிமன்றம். கர்நாடக அரசு, நீதிமன்றத்தின் அந்த வாக்கியத்தை சுட்டிக்காட்டி காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்க்கிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் கண்டிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படமாட்டாது.

அதேபோல், பெங்களூரு நகரின் குடிநீர் தேவையையும் தமிழகத்தின் நிலத்தடி நீர் மட்டத்தையும் காரணம் காட்டி தமிழகத்திடமிருந்து பிடுங்கி கர்நாடகாவிற்கு கூடுதல் நீர் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அறிக்கைகளையும் படித்துள்ளேன். தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் குறைந்துவிட்டது. காவிரி விவகாரத்தில் காவிரி நதிநீர் பங்கீட்டை பற்றி பேசாமல், நிலத்தடி நீர் மட்டத்தை ஏன் குறிப்பிடுகிறார் தலைமை நீதிபதி? தேவையில்லாத விஷயத்தில் ஏன் தலைமை நீதிபதி மூக்கை நுழைத்தார்? என வைகோ கேள்வி எழுப்பினார்.

மத்திய பாஜக அரசிற்கு மறைமுகமாக தலைமை நீதிபதி செயல்பட்டுள்ளார் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார் வைகோ.