vaiko meet karunandhi at gopalapuram house
திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவர் நல்ல நினைவாற்றலுடன் இருப்பதாகவும், விரைவில் பூரண நலம் பெற்று உரையாற்றுவார் எனவும் உருக்கத்துடன் தெரிவித்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார். பின்னர் அவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

முன்னதாக வைகோ வருகையையொட்டி , தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், துரை முருகன் ஆகியோர் கோபாலபுரத்திற்கு வந்திருந்தனர். வைகோவை அவர்கள் வரவேற்றனர்.
கருணாநிதியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கடந்த 1953 ஆம் ஆண்டுக்கு முன் கல்லுாரி மாணவராக இருந்த போது முதன் முதலாக கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்ததாக தெரிவித்தார்.
திமுகவிற்கான தொண்டர் படையை தான் தான் முதன் முதலில் உருவாக்கியதாகவும், நெருக்கடிநிலை காலத்தின்போது கருணாநிதி தனக்கு ஆதரவாக இருந்தார் என்றும் வைகோ கூறினார்.

கருணாநிதிக்கு 29 ஆண்டுகள் நிழலாக தான் இருந்தததாகவும், கடந்த இரண்டு மாதங்களாக தனது கனவில் வந்து கொண்டிருக்கிறார் என்றும் அவரை பார்க்க வேண்டும் என உள்ளுணர்வு சொன்னதால் உடனடியாக பார்க்க வந்தததாகவும் உருக்கத்துடன் தெரிவித்தார்.
தற்போது கருணாநிதி நல்ல நினைவாற்றலுடன் இருப்பதாகவும், விரைவில் பூரண நலம் பெற்று உரையாற்றுவார் என்றும் வைகோ தெரிவித்தார்.
வரும் செப்-5 ம் தேதி நடைபெறவுள்ள முரசொலி பவள விழாவில் கலந்து கொள்ள உள்ளதாகவும் வைகோ தெரிவித்தார்.
