தமிழகத்தில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியை உடைக்கும் பலே பிளான் டெல்லியில் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை தற்போதைய சூழலில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு தான் வெற்றி வாய்ப்பு என்று பா.ஜ.க ஆதரவு ஊடகங்கள் கூட கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதனால் தமிழத்தில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றால் தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்பட வேண்டும் என்று உளவுத்துறை டெல்லிக்கு அவசர தகவல் அனுப்பியுள்ளதாக கூறுகிறார்கள். 

எனவே தி.மு.க கூட்டணியை கலகலக்க வைப்பதற்கான வாய்ப்புகளை ஆராயும் படி டெல்லியில் உள்ள சில முக்கிய நபர்கள் தமிழகத்தில் உள்ள தங்கள் தொடர்புகளுக்கு அசைன்மென்ட் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். இந்த அசைன்மென்டின் ஒரு அம்சமாகவே ரஜினி – திருமா –திருநாவுக்கரசர் சந்திப்பும் என்றும் கூட சொல்கிறார்கள். ரஜினிக்கே தெரியாமல் ரஜினியை வைத்து டெல்லி கேம் ஆடுவதாக சொல்கிறார்கள். 

மேலும் தி.மு.க கூட்டணியில் பா.ம.க இணைய உள்ளதாக வெளியாகும் தகவல்களின் பின்னணியிலும் டெல்லியில் உள்ள முக்கிய நபர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். தங்களுடன் தான் பா.ம.க வரும் என்று கூறிக் கொண்டே தி.மு.கவிலும் பா.ம.க பேசும் தகவல்கள் அந்த டெல்லி நபர்கள் மூலமாகத்தான் வெளியே கசிவதாக கூறுகிறார்கள். இதன் மூலம் திருமாவளவன் அதிருப்தியில் இருப்பதை பட்டவர்த்தனமாகியுள்ளது.

பா.ம.க இருக்கும் கூட்டணியில் வி.சி.க இருக்காது என்று திருமாவளவன் வெளிப்படையாக கூறியதற்கு தி.மு.க – பா.ம.கவுடன் பேசி வருவதாக வெளியான தகவல்கள் தான் என்கிறார்கள். இதன் மூலம் திருமாவளவனை தூண்டி வைகோவை வெளியே கொண்டு வர முயற்சி நடைபெறுவதாக சொல்கிறார்கள். ஏனென்றால் ஒரு வருடத்திற்கும் மேலாக கூடவே இருக்கும் தனக்கு கூட்டணியை உறுதிப்படுத்தாமல் பா.ம.கவுடன் தி.மு.க பேசும் தகவல் வைகோவையும் அப்செட்டாக்கியிருக்கும் என்று நினைக்கிறது. 

எனவே வைகோ –திருமாவளவன் உள்ளிட்டோரை வைத்துக் கொண்டு மக்கள் நலக்கூட்டணி போல் மேலும் ஒரு கூட்டணியை உருவாக்க முடியுமா? அல்லது வைகோவையும், திருமாவையும் தினகரன் பக்கம் தள்ளிவிட முடியுமா? என்று வியூகங்கள் வகுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது எல்லாம் தெரிந்து தான் வைகோ முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அமைதியாக உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். 

இந்த நிலையில் தான் வைகோவுக்கு டெல்லியில் இருந்து திடீர் அழைப்பு வந்துள்ளது. அதுவும் தமிழக அரசியல் நிலவரங்களை பா.ஜ.க சார்பில் கவனிக்கும் நிர்மலா சீதாராமன் வைகோவை அழைத்து பேசியுள்ளார். கடுமையாக பா.ஜ.கவை எதிர்த்து வரும் வைகோ திடீரென அந்த கட்சியின் முக்கிய தலைவரான நிர்மலாவை சந்தித்திருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழி ஏற்படுத்தியிருக்கிறது. 

எது எப்படியோ தி.மு.க கூட்டணியில் பா.ம.க இணைய உள்ளதாக வெளியான தகவல் மூலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சலசலப்பு விரிசலாகி பிரச்சனையாகிவிடக்கூடாது என்று ஸ்டாலின் தரப்பு மும்முரமாக பணியாற்றி வருகிறது. எனவே இந்த முயற்சியில் வெல்லப்போவது டெல்லியா இல்லை அறிவாலயமா என்பது போகப் போகத்தான் தெரியும்.