காங்கிரஸ் தயவால் தான் எம்.பி., ஆகவில்லை என வைகோ கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் காங்கிரஸ் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

 

’’அடிக்கடி அரசுகளை கவிழ்த்ததன் மூலம் வாக்குறுதியை உடைத்ததும் காங்கிரஸ்தான். காஷ்மீர் மக்களின் உணர்வுகளுடன் விளையாடியதும் காங்கிரஸ் கட்சிதான். பிரதமர் மோடியை சந்தித்த போது காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக வாக்களிப்பேன் என்று கூறினேன். நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தினால் தென்னாடு அழியும். அணை பாதுகாப்பு மசோதா நிறைவேறினால் இந்தியா துண்டாகி விடும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகனிடம் கூறி இருக்கிறேன். அதைத் தான் உங்களிடமும் கூறுகிறேன் என்று பிரதமர் மோடியிடம் சொன்னேன்’ என்று வைகோ காங்கிரஸ் மீது மீண்டும் கடுமையாக சாடி இருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பேசியுள்ள இளங்கோவன், ‘’காங்கிரஸ் நன்றி இல்லாத கட்சி என்று வைகோ கூறி இருக்கிறார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளித்ததால் தான் வைகோ மேல்சபை எம்.பி. ஆகி இருக்கிறார். இன்னும் 15 நாட்கள் கூட ஆகவில்லை. நன்றி மறந்த மனிதர் என்று சொன்னால் அது வைகோ தான்.

அனாதையாக இருந்த வைகோவை தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்ததால்தான் அவரது கட்சியை சேர்ந்த கணேசமூர்த்தி எம்.பி.யாக முடிந்தது. வைகோவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை வைத்து தான் மேல்சபையில் பேசி இருக்கிறார். அவர் காங்கிரசை பற்றி பேசியது மட்டுமல்ல, அமித்ஷா சொல்லி பேசி இருக்கிறார்.

வைகோ மிகப்பெரிய துரோகி. நன்றி மறந்தவர் என்று தான் சொல்ல வேண்டும். நம்பர் ஒன் துரோகி என்ற நிலையில் வைகோ இருக்கிறார். காங்கிரசை பற்றி அவர் பேசட்டும். ஆனால், அவரைப் பற்றி நாங்கள் பேசினால் கண்டிப்பாக அது மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடும். காங்கிரசைப் பற்றி விமர்சனம் செய்வதை வைகோ இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என அவர் கூறியுள்ளார்.