ம.தி.மு.க தி.மு.கவின் கூட்டணி கட்சி எனச் சொல்லப்பட்டாலும் இன்னும் அக்கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்ற இழுபறி நீடித்தே வருகிறது.

ஆனாலும் இழுபறியை மனதில் வைக்காமல் வைகோ தான் போட்டியிடும் தொகுதியை தேர்ந்தெடுப்பதில் ஆர்வமாகி இருக்கிறார். வழக்கமாக விருதுநகர் பாராளுமன்ற  தொகுதிதான் விரும்பி தேர்வு செய்வார் வைகோ. காரணம் ம.தி.மு.க வாக்கு வங்கி இத்தொகுதியில் அதிகமாக இருப்பதாக நினைப்பார். ஆனால் இப்போதுள்ள நிலைமை படி ம.தி.மு.க வாக்கு வங்கி சிதைந்திருப்பதாலும், தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் (2009 மற்றும் 2014) போட்டியிட்டு விருதுநகர் தொகுதியில் தோற்று இருப்பதால்  ராசியில்லாத தொகுதியாக இதை கருதுகிறார். எனவே, திருச்சிக்கு மாறும் முடிவுக்கு வந்திருக்கிறார் வைகோ. இதற்கு முக்கிய காரணம் திருச்சியில் உள்ளூர் வேட்பாளர்களை விட வெளியூர் தொகுதி வேட்பாளர்கள்தான் அதிக வெற்றிப் பெற்று இருக்கிறார்கள் என்ற சென்டிமென்டை வைத்து மனக்கணக்கு போடுவதுதானாம்.

திருச்சியை பொறுத்தவரை மூத்தரையர் சமூக மக்கள் அதிகமாக இருந்தாலும் அங்கே ஜாதி ரீதியான வாக்குகளையெல்லாம் தாண்டி திருச்சி தொகுதி மக்கள் வெளியூர் வேட்பாளர்கள் பலரை கடந்த காலங்களில் எம்.பி ஆக்கி இருக்கிறார்கள். அதன்படி திருச்சி தொகுதியை பொறுத்தவரை ஏற்கனவே காங்கிரஸை சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம், ம.தி.மு.கவை சேர்ந்த எல்.கணேசன் மற்றும் அ.தி.மு.கவை சேர்ந்த தலித் எழில்மலை போன்ற வெளியூர் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்று நாடாளுமன்றம் சென்று இருப்பதால் தானும் அதே பாணியில் நாடாளுமன்றம் செல்லத் தயாராகி விட்டார் வைகோ.

வந்தாரை வாழ வைக்கும் இந்த திருச்சி சென்டிமென்ட் வைகோவிற்கு கை கொடுக்குமா?  இல்லையா?  என்பது வருகிற  நாடாளுமன்ற தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்