தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், ஆலையின் அத்துமீறல்கள் குறித்தும், ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் மதிமுக பொது செயலாளர் வைகோ வாகன பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வரும் 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மதிமுக பொது செயலாளர் வைகோ வாகன பிரச்சாரப் பயணத்தை தொடங்க உள்ளார். ஐந்து நாட்கள் நடக்கும் இந்த பயணத்தை கோவில் பட்டியில் 17 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வைகோ தொடங்க உள்ளார்.

பின்னர் அங்கிருந்து எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், சூரங்குடி, வைப்பார் வழியாக குளத்தூர் சென்று முதல் நாள் பிரச்சார பயணத்தை முடித்துக் கொள்கிறார். அப்போது பொது மக்களிடம் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனால் அந்த ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டியதன்
அவசியம் குறித்து விளக்கி கூறவிருக்கிறார்.

இதன் பின்ன்ர, 18 ஆம் தேதி புதன் அன்று மாலை 4 மணிக்கு கரிசல் குளம் கிராமத்தில் பிரச்சார பயணத்தை தொடங்கும் வைகோ, காமநாயக்கன்பட்டி, பசுவந்தனை, ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர் வழியாகச் சென்று குறுக்குச் சாலையில் இரண்டாம் நாள் பயணத்தை நிறைவு செய்கிறார். 21 ஆம் தேதி அன்று
செய்துங்கநல்லூரில் ஆழ்வார் திருநகரி, நாசரேத், பேய்குளம், சாத்தான்குளம் வழியாக மெய்ஞானபுரம் வழியாக உடன்குடியில் முடிக்கிறார். 22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருவைகுண்டம் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கி ஏரல், ஆத்தூர், காயல்பட்டினம், திருச்செந்தூர் மணப்பாடு வழியாக சென்று பெரியதாழை பகுதியில் பிரச்சாரத்தை முடிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து 28 ஆம் தேதி மாலை தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்புகள் குறித்தும், ஆலையின் அத்துமீறல்கள் பற்றியும் பேச உள்ளார். வைகோவின் பிரச்சாரம் குறித்து மதிமுக தலைமை கழகம், சுற்றுப்பயண விவரத்தை வெளியிட்டுள்ளது.