பொதுவாக வைகோ என்றாலே விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி தான் நினைவுக்கு வரும். முதலில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இருந்து மறுசீரமைப்பு செய்யப்பட்டு சிவகாசி மக்களவைத் தொகுதி உருவானது. 

கடந்த 2009-ல் சிவகாசி மக்களவைத் தொகுதி விருதுநகர் மக்களவைத் தொகுதியாக மாற்றம் பெற்றது. தற்போது இத்தொகுதியில் சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. 

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் கடந்த 1971-ம் ஆண்டு முதல் இரண்டு முறை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயலட்சுமியும், 1980-ல் அதிமுகவைச் சேர்ந்த சவுந்த ரராஜனும், 1989-ல் அதிமுக வேட்பாளர் காளிமுத்துவும், 1991-ல் அதிமுக வேட்பாளர் கோவிந் தராஜுலுவும் போட்டியிட்டு வெற்றிபெற் றனர்.
1996-ல் திமுக கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அழகிரிசாமி வெற்றி பெற்றார். 1998-ல் மதிமுக பொதுச் செயலர் வைகோவும், 2004-ல் மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனும் வெற்றி பெற்றனர். 

பின்னர் 2009-ம் ஆண்டில் நடைபெற்ற விருதுநகர் மக்களவைத் தேர்தலிலும் வைகோ போட்டியிட்டார். அப்போது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். 

இதையடுத்து கடந்த முறை நடைபெற்ற தேர்தலிலும் மதிமுக பொதுச் செயலர் வைகோ விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன் 4,06,694 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

இந்நிலையில்  விருதுநகர் தொகுதியை எப்படியும் கைப்பற்றுவது என்ற எண்ணத்தில் கடந்த 3 மாதங்களாக இத்தொகுதியில் விறுவிறுப்பாக தேர்தல் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வந்த மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு விருதுநகர் மக்களவைத் தொகுதி கைவிட்டுப் போனது. 
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கே விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட உள்ளதால், திருச்சியில் வைகோ போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.