செண்பகவல்லி தடுப்பணையில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சீர் செய்து விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை வைத்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-

திருநெல்வேலி மாவட்டம் - வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில் பகுதிகளில் 15000 ஏக்கர் பரப்பு விவசாயத்திற்கு நீர் ஆதாரமாகத் திகழ்ந்து வந்த செண்பகவல்லி தடுப்பு அணையில் உடைப்புகள் ஏற்பட்டன. அதன் பிறகு  தண்ணீர் கிடைக்கவில்லை.எனவே உடைப்பைச்  சீர் செய்வதற்காக, எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், தமிழக அரசு கேரள அரசுக்குப் பணம் கொடுத்தது. ஆனால் கேரள அரசு தடுப்பு அணையைச் சீர்படுத்த வில்லை. பலமுறை தமிழக அரசு வேண்டுகோள் விடுத்த பிறகு, வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுத்து விட்டது எனவே,செண்பகவல்லி தடுப்பு அணை உடைப்பைச் சீர் படுத்துவதற்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரண்டு முறை உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தி இருக்கின்றோம். பலமுறை ஆர்ப்பாட்டங்கள் நடத்தி இருக்கின்றோம். கேரள முதல்வர்கள், அச்சுதானந்தன், உம்மன் சாண்டி, பினராயி விஜயன் ஆகியோரை நான் நேரில் சந்தித்துக் கோரிக்கை மனுக்கள் கொடுத்து இருக்கின்றேன்.

தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையான பரம்பிக்குளம் - ஆழியாறு உள்ளிட்ட அனைத்து நீர்ப் பிரச்சனைகளையும் பேசித் தீர்க்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்து இருந்தோம். அதன்பிறகும், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில், ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக கேரள முதல்வர்கள் நேற்று திருவனந்தபுரத்தில் சந்தித்து இருக்கின்றனர். இரண்டு மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பிரச்சனைகள் குறித்துப் பேசி இருக்கின்றனர். ஆனால், செண்பகவல்லி தடுப்பு அணை குறித்துப் பேசியதாகத் தகவல் இல்லை. சிவகிரி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் பகுதி விவசாயிகள் 25 பேர் நேற்று திருவனந்தபுரம் சென்று இரண்டு முதல்வர்களையும் சந்தித்துக் கோரிக்கை மனு கொடுக்க முனைந்துள்ளனர். அவர்களைக் கேரளக் காவல்துறையினர் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தது தவறு ஆகும்.

முதல்வர்கள்  சந்திப்பு இன்று நிகழ்வதாக முதலில் கூறப்பட்டு இருந்தது. அதன்படி அந்த விவசாயிகள் இன்று அவர்களைச் சந்திக்க முன்கூட்டியே நேரம் கேட்டு ஒப்புதல் பெற்று இருந்தனர். ஆனால் திடீரென சந்திப்பு நேற்றைக்கு மாற்றப்பட்டது. அதற்கு அவர்களால் ஒப்புதல் பெற முடியவில்லை. கோரிக்கை மனுவும் கொடுக்க முடியவில்லை.செண்பகவல்லி தடுப்பு அணை உடைப்பைச் சீர்படுத்தவும், தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.