நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக தரப்பில் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

2வது கட்ட பேச்சுவார்த்தை நீண்ட இழுபறிக்கு பிறகு துவங்கிய நிலையில் வைகோ – துரைமுருகனை சந்தித்து பேசினார். அப்போது வைகோ – துரைமுருகன் இடையே காரசார பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அப்போது மதிமுகவின் வாக்கு வங்கி தற்போது என்ன என்று வைகோவிடம் துரைமுருகன் நேரடியாகவே கேட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு வைகோ 5 சதவீதத்திற்கும் மேல் என்று கூறியதாகவும், ஆனால் இதனை ஏற்க துரைமுருகன் மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.  

மேலும் கடந்த 2004 தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிட்ட 4 தொகுதிகளையும் தர வேண்டும் என்று வைகோ வலியுறுத்த அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை, என்ற துரைமுருகன் தலைவர் ஒரே ஒரு தொகுதியை மட்டும் தான் கொடுக்க முடியும் என்று கூறிவிட்டார், சட்டப்பேரவை தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்று வைகோவிடம் தெரிவித்ததாகவும் கூறுகிறார்கள். அப்படி என்றால் 2 தொகுதிகளாவது தர வேண்டும் என்று வைகோ முரண்டு பிடித்ததாக கூறுகிறார்கள். 

அந்த சமயத்தில் சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இருந்து துரைமுருகனுக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசியவர் ஒரு தொகுதி என்றால் உங்கள் சின்னம், இரண்டு தொகுதி என்றால் உதய சூரியன் சின்னம் என்று பேசி முடியுங்கள் அதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்று துரைமுருகனிடம் கூறியதாக சொல்கிறார்கள். இதனை அப்படியே துரைமுருகன் வைகோவிடம் தெரிவித்துள்ளார்.

 

 இதன் பிறகு பேச எதுவுமே இல்லை என்று கூறிவிட்டு வைகோ அங்கிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் இந்த தேர்தலில் திமுகவை விட்டால் தமக்கு வேறு நாதியில்லை என்பது வைகோவுக்கு தெரியும். இதனால் தான் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளோம். தொகுதிப் பங்கீட்டை நாளை அறிவிப்பதாக கூறிவிட்டு நேற்று வைகோ புறப்பட்டுள்ளார். இதனிடையே வைகோ இன்று தனது கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். 

அப்போது திமுக தரப்பில் இருந்து ஒரே ஒரு தொகுதி என்று கூறப்பட்டுள்ளது குறித்தும் 2 தொகுதிகள் என்றால் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்கிற நிபந்தனை குறித்தும் ஆலோசிக்க உள்ளார். இந்த ஆலோசனையின் முடிவில் வைகோ எடுக்கப்போகும் முடிவு தான் அவரது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்கிறார்கள். பார்ப்போம் என்ன முடிவு எடுக்கிறார் என்று.