Asianet News TamilAsianet News Tamil

வாங்கப்போற ஒரு சீட்டுக்கு நீங்க கொடுக்குற பில்டப் இருக்கே... உங்கள ஒரு பயபுள்ள அடிச்சுக்க முடியாது..!

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கான தொகுதி பங்கீடு குறித்து, முதல் கட்ட பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது. அது குறித்து கருத்து கூற முடியாது. திருச்சியில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்தும் கருத்து கூற முடியாது: வைகோ

vaiko DMK allience
Author
Tamil Nadu, First Published Feb 25, 2019, 4:43 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

* தமிழகத்தின் நலனில் உண்மையிலேயே அக்கறை, முயற்சி, நம்பிக்கை உள்ளவர்களுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம். அவர்களோடு தொடர்பு கொண்டு பேசி, கூட்டணியை அமைத்துவிட்டு பத்திரிக்கைகளுக்கு தகவல் சொல்வோம்: கமல்ஹாசன் (இந்த மண்ல உள்ள அம்பூட்டு பெரிய கட்சிகளும் கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி பண்ணிட்டு பங்கீட்டில் முட்டி மோதிட்டு இருக்குது. ஆனா இவரு இப்பதான் கூட்டணியின் கொள்கைய பத்தி பேச ஆரம்பிச்சிருக்கார். எப்ப முடிஞ்சு, என்னைக்கு சொல்லி, எந்த எலெக்‌ஷன்ல நிப்பாய்ங்களோ!? இதுதானா கமல் உங்க டக்கு?)

* எங்களுடைய  பலம் எங்களுக்கு நன்றாக தெரியும். கடந்த ஒரு தேர்தலை வைத்து எங்களை குறைத்து மதிப்பிடுவதை ஒரு காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தனித்துப் போட்டியிடவும் தயாராக இருக்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த் (அக்கா பலமிருக்குதுன்னா தனிச்சுதான் போட்டியிடுங்களேன், யாராச்சும் உங்களை கூட்டணிக்கு வந்தே ஆகணும்னு இழுக்குறாய்ங்களா என்ன? நுறு ஜெயலலிதாவுக்கு, நூறு கருணாநிதிக்கு, ஆயிரம் ஸ்டாலினுக்கு சமமான கேப்டன் இருக்கச்சல் கவலை எதுக்குங்றேன்?)

*  தமிழகத்தை ஆள்வது பா.ம.கவின் இலக்கு கிடையாது. தமிழகத்தை முனேற்றுவதுதான் எங்கள் இலக்கு. ஆட்சிக்கு வந்தால் சீக்கிரமாக முன்னேற்றலாம், அவ்வளவுதான்: அன்புமணி. (வெறும் ஏழு பிளஸ் ஒரு சீட் கொடுத்ததுக்காக எப்படியெல்லாம் பேச வேண்டிய கொடுமை நடக்குதுன்னு பாருங்க மக்கழேய்! 2016 சட்டசபை தேர்தலுக்கு ஊர் ஊரா ஒட்டுன ‘மா! மு! அ!’ போஸ்டர் இன்னும் கூட சில இடங்கள்ள கிழியலை. ஆனா அதுக்குள்ளே இப்படியொரு பல்டி. ஏனுங்க அன்பு, தமிழகத்தை பா.ம.க. ஆளும்!ன்னு சொன்னா எடப்பாடி அண்ணாச்சி கோவிச்சுக்குவாகளோ?)

* சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கின்ற வகையில் மோடியின் ஆட்சி நடக்கிறது. எனவே மீண்டும் அவர் பிரதமராக கூடிய வாய்ப்பும்  சூழலும் இல்லை. லோக்சபா தேர்தல் முடிந்து ராகுல்தான் பிரதமர் ஆவார்: ஸ்டாலின். (யாருப்பா அது மம்தாவுக்கு ஒரு போனைப் போடு!  மறுபடியும் மறுபடியும் ராகுலை தூக்கிப் பிடிக்கிற ஸ்டாலினை கண்டிச்சு அறிவாலய வாசலில் மம்தாம்மா தலைமையில ஒரு தர்ணா அறிவிச்சுடலாம். சி.பி.ஐ.யே வந்து சொன்னாலும் கேட்கக்கூடாது.)

* தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கான தொகுதி பங்கீடு குறித்து, முதல் கட்ட பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது. அது குறித்து கருத்து கூற முடியாது. திருச்சியில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்தும் கருத்து கூற முடியாது: வைகோ. (இப்படி பேட்டி கொடுக்குறதுக்கு பதிலா, பேட்டி கேட்டு மைக் நீட்டுனப்பவே ‘பேட்டி கொடுக்க முடியாது’ன்னு நீங்க சொல்லியிருக்கலாம்ணே! ஆனா ஒண்ணுண்ணே வாங்கப்போற அந்த ஒண்ணு அல்லது ரெண்டு சீட்டுக்கும் கூட நீங்க கொடுக்குற பில்ட் - அப்ஸ் இருக்குது பாருங்க, அந்த கெத்து இருக்குற வரைக்கும் உங்கள ஒரு பயபுள்ள அடிச்சுக்க முடியாது.)

Follow Us:
Download App:
  • android
  • ios