தமிழக மக்களின் பிரதிநிதியான முதல்வரை சந்திக்க முடியாத பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகத்தில் என்ன வேலை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தி போராட்டங்கள் வலுத்துவருகின்றன. உரிமைக்காக ஒன்றிணைந்துள்ள தமிழர்களை பிளவுபடுத்தும் வகையிலான ஐபிஎல் போட்டிகள், சென்னையில் நடைபெறக்கூடாது என வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்களால், சென்னையில் நடைபெற இருந்த ஏனைய போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டுள்ளன.

அதேபோல மேலாண்மை வாரியத்தை அமைக்காத பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை விமான நிலையம், கிண்டி, ஆலந்தூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை கிண்டியில், திமுக சார்பில் ராட்சத கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டது. சென்னை வேளச்சேரியில் வைகோ தலைமையில் பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்டு போராட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மேலாண்மை வாரியம் அமைக்காமலும், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கான நீதியை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குழிதோண்டி புதைக்க பின்புலமாக இருந்தவரும் பிரதமர் மோடி தான். தஞ்சை மக்களை பசியால் வாடவைத்து எத்தியோப்பியாவை போல ஆக்க நினைக்கும் மோடி, நன்செய் நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்று, மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றி தமிழர்களை ஒழித்துவிடலாம் என நினைக்கிறார்.

தமிழ்நாட்டை கைப்பற்றிவிடலாம் என்ற மோடியின் நினைப்பு ஒருபோதும் நிறைவேறாது. காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் பிரதிநிதியான முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்காத பிரதமர் மோடிக்கு, தமிழகத்தில் என்ன வேலை? இங்கு ஏன் வருகிறீர்கள்? என ஆவேசமாக வைகோ கேள்வி எழுப்பினார்.