பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதிஅமைச்சருமான அருண் ஜெட்லி இன்று மதியம் 12.07 மணியளவில் காலமானார் . அவருக்கு குடியரசு தலைவர் , துணைக் குடியரசு தலைவர் ,பிரதமர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் . 

மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ அருண் ஜெட்லி மறைவுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார் .  அவர் கூறியிருப்பதாவது :

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், மத்திய சட்டம், நிதி, செய்தி ஒலிபரப்பு ஆகிய துறைகளின் முன்னாள் அமைச்சருமான அருண் ஜெட்லி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன்.சட்ட வல்லுநர், ஆங்கிலப் புலமை மிக்கவர், நாடாளுமன்ற விவாதங்களில் முத்திரை பதித்தவர், அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலங்களிலும் எளிதில் அணுகக் கூடியவராக இருந்தார். 

ஆளுமைத் திறம் மிக்கவர், பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து, விரைவாக முடிவுகளை எடுக்கக்கூடியவர்;  எனக்கு நல்ல நண்பர்.அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார் .