டெல்லி ஜே.என்.யூ பல்கலை.,யில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்... வைகோ கண்டனம்!!
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனமான டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்களை கல்வித் துறையில் மட்டுமின்றி, அரசியல் பொருளாதாரத் துறையிலும் ஒளிரச் செய்து வருகிறது. இங்கு இந்திய நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் நிலைப் பெற பல்வேறு சித்தாந்தங்கள் பற்றிய கருத்தியல் விவாதங்கள் நடப்பதும், சமூகநீதி,பெண்ணுரிமை, சமத்துவம், மதச் சார்பின்மை மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட கோட்பாடுகள் பற்றி மாணவர்களிடையே கருத்தரங்கம், பயிலரங்கம் நடப்பதும் பல ஆண்டுகளாக தொடர்கின்றன.
இதையும் படிங்க: அதெல்லாம் பழசு, இது ஈரோடு பார்முலா..! கமல் ஹாசன் கால்ஷீட் எவ்வளவு.? பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு
2014 இல் மோடி தலைமையில் ஒன்றிய பாஜக அரசு அமைந்த பின்னர் ஜே.என்.யூ இந்துத்துவ மத வெறிக் கும்பலின் கொடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. மற்றும் இந்துந்துவ குண்டர்கள் ஜே.என்.யூ வில் அத்து மீறி நுழைந்து, முற்போக்கு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யும் மாணவர் அமைப்பு நிர்வாகிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், குறிப்பாக இஸ்லாமிய, தலித் மாணவர்களை இலக்காக வைத்து வன்முறையை ஏவுவதும் தொடர் நிகழ்வுகள் ஆகி விட்டன. இதற்கு ஜே.என்.யூ நிர்வாகமும் துணை போகிறது. நேற்று பிப்.19 ஆம் தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 30க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள், ரிசர்வேசன் கிளப் என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். கூட்டம் முடிந்த பின்னர், அரங்கிற்கு வந்த ஏ.பி.வி.பி அமைப்பினர் பெரியார் படத்தையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
இதனைத் தடுக்கச் சென்ற மாணவர்கள் மீது 15க்கும் மேற்பட்டோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாசர் என்ற மாணவருக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காயம் அடைத்த மாணவர்கள் சிலரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பொதுஉடைமைத் தலைவர்களை இழிவு படுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பலின் இத்தகைய செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டு மாணவர்கள் மீது கொடூர வன்முறையை ஏவி, தந்தை பெரியார் திருவுருவப்படத்தையும் சேதப்படுத்திய ஏ.பி.வி.பி. கும்பலை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். காயம் அடைந்த மாணவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.