தமிழகத்தின் உரிமை பறிபோனதற்கு பழனிசாமி தலைமையிலான அரசுதான் காரணம் என வைகோ பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் இருப்பதாக காரணம் காட்டி தமிழகத்திற்கான காவிரி நதிநீர் பங்கிலிருந்து 14.75 டிஎம்சி நீரை குறைத்து, அதை பெங்களூரு நீர்த்தேவைக்காக உச்சநீதிமன்றம் ஒதுக்கியது. இதற்கு வைகோ ஏற்கனவே கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழகத்திற்கான நீரை குறைத்தது, உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு இழைத்த அநீதி. காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் பாலி நாரிமனின் தந்திரம் வென்றுவிட்டது. நமது தரப்பிலான நியாயமான மற்றும் தெளிவான வாதங்களை எடுத்துவைக்க தமிழக அரசு தவறிவிட்டது.

முல்லை பெரியாறு வழக்கில், தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் ஜெயலலிதா படித்து பார்த்து அதுதொடர்பாக வழக்கறிஞர்களிடம் பலகட்ட ஆலோசனைகளை நடத்தி, அறிவுரைகளை வழங்கி, தெளிவான வாதங்களை முன்வைத்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டினார்.

ஆனால் தற்போதைய அரசு அதுபோன்ற நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டது. சரியான வழக்கறிஞர்களை வைத்து தெளிவான வாதங்களை முன்வைக்காததே தமிழகத்தின் உரிமை பறிபோனதற்குக் காரணம் என வைகோ குற்றம்சாட்டினார்.