நாங்கள் எச்சரிக்கையாக பேசுவது வெட்டிப்பேச்சு அல்ல எனவும் கமல் பார்த்து பேச வேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

பாஜக தொண்டர்கள் திரிபுராவில் அமைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றினர். லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைப் போல், தமிழகத்தில் பெரியார் சிலைகள்  உடைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழகத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றினைந்து ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். 

இதையடுத்து ஹெ.ராஜா அந்த பதிவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கினார். ஆனாலும் கண்டனங்கள் வலுத்தன.

இதைதொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா தான் அந்த பதிவை போடவில்லை எனவும் அதை போட்ட தனது அட்மினை நீக்கிவிட்டேன் எனவும் தெரிவித்தார். 

இதனிடையே நேற்று இதுகுறித்து நடிகர் கமல் கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான் வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம் எனவும் எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை ஹெச்.ராஜா தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம். வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதில் அளித்துள்ளார். அதில், நாங்கள் எச்சரிக்கையாக பேசுவது வெட்டிப்பேச்சு அல்ல எனவும் கமல் பார்த்து பேச வேண்டும் எனவும் தெரிவித்தார்.