அ.இ.அ.தி.மு.க. கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கும் முதல்வர் பன்னீர் செல்வத்தை ஒருபோதும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆத்மா மன்னிக்காது என்று அ.தி.மு.க.செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அ.தி.முக. கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வத்தின் அணியில் சேர்ந்து, பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதையடுத்து, மதுசூதனனை கட்சியின் அவைத்தலைவர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டது.

இது குறித்து அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறுகையில், “ அ.தி.மு.க. கட்சியை பிளவுபடுத்தும் முயற்சியில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டுள்ளார். பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மக்கள் அவர்களை ஒதுக்கி விடுவார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மறந்தவர்கள், அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவரும் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்துள்ளனர். அ.தி.மு.க. கட்சியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஓ.பன்னீர் செல்வத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆத்மா ஒருபோதும் பன்னீர் செல்வத்தை மன்னிக்காது.

நிச்சயம், கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா முதல்வராகப் பொறுப்பு ஏற்பார். நல்லசெய்தி விரைவில் வந்து சேரும்'' எனத் தெரிவித்தார்.
