அண்டை நாடுகளிலிருந்து வந்து குடியுரிமை பெறும் இந்துக்களை எங்கு குடியமர்த்தப்போகிறீர்கள் என்று மத்திய அரசுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். 
குடியுரிமைத் திருத்த சட்டம் அமலுக்குவந்துள்ள நிலையில், அச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. பல மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள், துப்பாக்கிச்சூடுகள் போன்றவையும் நடந்தேறியுள்ளன. இந்நிலையில் குடியுரிமைத் திருத்த சட்டம் தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மாநில சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசியபோது மத்திய பாஜக அரசுக்கு கேள்வி ஒன்றை எழுப்பினார்.

 
“குடியுரிமை சட்ட திருத்தத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த இந்துகளை மத்திய அரசு எப்படி, எந்த இடத்தில் தங்கவைக்கப்போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. இது தொடா்பாக திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இருக்கும் என்றும் நான்  நினைக்கவில்லை.” என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

 
 “பசு மாடு பயனுள்ள விலங்குதா. ஆனால், அது பயனளிக்க உதவாதபோது, அதை வெட்டி உணவாகப் பயன்படுத்தலாம்” என்று வீரசாவர்க்கர் குறிப்பிட்டதை கோடிட்டுகாட்டி பேசிய உத்தவ்  தாக்கரே, “பசுமாட்டின் பயன்பாடு குறித்து வீர சாவர்க்கர் கூறிய கருத்தில் பாஜக தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.