ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களை பொதுமக்களிடம் விற்பனை செய்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர் ,  துணி துவைக்கும் சோப்பு உள்ளிட்ட சலவைப் பொருட்களை கொண்டு அந்த முகமூடிகளை துவைத்து  இஸ்திரி போட்டு அதை விற்பனைக்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது .  இது மும்பை மக்கள் மத்தியில் மட்டுமல்ல நாடு முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது இந்தியாவில் மெல்ல மெல்ல பரவத் தொடங்கிய கொரோனா தற்பொழுது நாடு முழுவதும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது .  இந்தியாவில் 11,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, சுமார் 397 பேர் உயிரிழந்துள்ளனர் .  கடந்த ஐந்து நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் , அந்த அளவிற்கு இந்த வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது .

 

நாட்டிலேயே  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின்  பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது ,  இங்கு 2334 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது , 160 பேர் உயிரிழந்துள்ளனர் . டெல்லி ,  தமிழ்நாடு , தெலுங்கானா , மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன .  மகாராஷ்டிர மாநிலம் அதிக மக்கள் தொகை  கொண்ட மாநிலம் என்பதால் வைரஸ் பரவல் அதிகமாக இருந்து வருகிறது ,  இந்நிலையில் அந்த மாநில அரசு வைரசைக்  கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது ,  பொதுமக்கள் வெளியில் செல்லும்போது தவறாமல் முகக் கவசங்களை அணிந்து செல்ல வேண்டு மெனவும் எச்சரித்துள்ளது .  இதனால் மகாராஷ்டிராவில் முகக் கவசத்திற்கு  கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் மும்பையின் மேற்கு பகுதிகளில் ஒன்றான விராரில் மும்பை குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார்,  முகக் கவசம் விற்பனையில் ஈடுபட்டிருந்த மூன்று பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான முகக்கவசங்களை அவர்கள் பறிமுதல் செய்தனர் ,  பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று  விசாரித்ததில் முகக் கவசங்கள் குறித்து அவர்கள் கூறிய தகவல் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது .  ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வீசி எறியப்படும் முகக்கவசங்களை சேகரித்து அதை சோப்பு உள்ளிட்ட டிடர்ஜென்ட்களால் நன்கு தூய்மை செய்து ,  இஸ்திரி செய்து  அதை புத்தம்புது  மாஸ்குகளைப் போல உறைகளில்  அடைத்து மக்களிடம் விற்பனை செய்து வந்ததாக அவர்கள் கூறினர் .  தற்போது மும்பையில் அதிக முகக் கவசங்கள் தேவைப்படுகிறது என்பதால் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி தாங்கள் இந்த வியாபாரத்தில்  இறங்கியதாக அவர்கள் கூறியதேக் கேட்டு  போலீசார் அதிர்ந்தனர்.   இதனையடுத்து விரார் கிழக்கு பகுதியில் கட்கபாடாவில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் ஏராளமான முக கவசங்களை பதுக்கி வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். சலவை செய்ய வைத்திருந்த  முகக் கவசங்களையும் கைப்பற்றினர். 

   

அங்கு கைப்பற்றப்பட்ட அனைத்தும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் ஆகும் . சலவை இயந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் ,  அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்ட முகமூடிகள் அனைத்தும்  N95 வகை முகமூடிகள் என்பது குறிப்பிடத்தக்கது .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்த போலீசார் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட முகமூடிகளை சலவை செய்து சிலர் மக்களிடம் விற்பனை செய்து வருவதாக தங்களுக்கு  கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர்களை கைது செய்ததாகவும் இன்னும் இதுபோல மும்பையில் ஏதேனும் மோசடி சம்பவங்கள் நடக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் அவர்கள்  தெரிவித்தனர் ஏற்கனவே ஒருவர் பயன்படுத்திய முகமூடியை மற்றவர்கள் பயன்படுத்துவதன் மூலம் வேகமாக வைரஸ் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது ,  எனவே இதுபோன்ற மனிதாபிமானமற்ற முறையில் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க முயற்சியில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.