2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகாருக்கு பதில் அளிப்பதாக கூறி செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மறைந்த ஜெயலலிதாவை ஆத்தா என்றும் கொள்ளைக்காரி என்றும் விமர்சித்தது மு.க.ஸ்டாலினை கடுப்பாக்கியுள்ளதாக சொல்கிறார்கள்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சசிகலாவிற்கு எதிரான மன நிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இதற்கு காரணம் ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தம். அதனை தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக விசாரணை ஆணையம் எல்லாம் அமைத்தார்கள் ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்து ஆனால் அந்த விசாரணை ஆணையம் அப்படியே செயலற்று தற்போது உள்ளது. அதே சமயம் ஜெயலலிதா மீதான மக்களின் அபிமானத்தை திமுகவிற்கு சாதகமாக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறார்.

கலைஞர், ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த முடியவில்லை என்று கூறியது முதல் ஜெயலலிதா இருந்திருந்தால்இப்படி நடந்திருக்குமா என்பது வரை ஸ்டாலின் பல இடங்களில் ஜெயலலிதாவை புகழ்ந்து பேச ஆரம்பித்திருந்தார். அதோடு மட்டும் அ ல்லாமல் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கண்டுபிடித்து தண்டனை வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள ஆரம்பித்தார். அதிமுகவில் ஜெயலலிதா மீது அபிமானம் கொண்ட பலரையும் கூட ஸ்டாலினின் இந்த பிரச்சாரம் கவர்ந்தது.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் சமயத்திலும் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை என்றி ஸ்டாலினின் பேச்சு எடுபட்டது. தற்போதும் கூட வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஜெயலலிதாவை ஒப்பிட்டு ஓபிஎஸ், இபிஎஸ்சை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். சொல்லப்போனால் ஜெயலலிதாவை கலைஞருக்கு நிகரான ஒரு தலைவராகவே ஸ்டாலின் உருவகப்படுத்த ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் தான் கடந்த வாரம் ஆ.ராசா செய்தியாளர்களிடம் பேசும் போது ஜெயலலிதாவை மிக கடுமையாக விமர்சித்துவிட்டார்.

அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்று கூறும் எடப்பாடி பழனிசாமி ஊழல் ஆட்சி தான் நடத்துகிறார். நாட்டை கொள்ளை அடித்த கொள்ளைக்காரி என்கிற ரீதியில் ஆ.ராசா மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார். அதோடு மட்டும் இல்லாமல் ஜெயலலிதாவை இப்படி ஆ.ராசா கொள்ளைக்காரி என்று கூறிய நாள் ஜெயலலிதாவின் நினைவு நாள். இதனால் அதிமுகவின்ர மட்டும் அல்லாமல் பொதுவானவர்களும் கூட ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பெண்கள் அதிக அளவில் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இதன் மூலம் ஜெயலலிதா விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஜெயலலிதா மீது கரிசனம் உள்ளது போல் ஸ்டாலின் பேசும் நிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ராசாவோ மறைந்த ஜெயலலிதாவை கொள்ளைக்காரி என்று விமர்சிக்கிறார் என்று சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்யப்பட்டது. இந்த தகவல் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு சென்ற நிலையில் எடப்பாடியை பற்றி மட்டும் பேசாமல் ராசா ஏன் ஜெயலலிதாவை இப்படி விமர்சித்தார் என்று ஸ்டாலின் கடுப்பதானதாக சொல்கிறார்கள். மேலும் எடப்பாடி தான் நமது டார்கெட் ஜெயலலிதா இல்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆனால் ஸ்டாலின் இப்படி கடுப்பாக இருந்தாலும் கூட ஆ.ராசா பேச்சால் திமுக மீது சில நடுநிலையாளர்களும் கூட அதிருப்தி அடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. என்ன தான் மாற்று கருத்துகள் இருந்தாலும் மறைந்த ஒரு தலைவரை இவ்வளவு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பது திராவிட அரசியலில் கிடையாது. ஆனால் திராவிடச் சூரியன் என்று அடைமொழி போட்டுக் கொள்ளும் ராசா இப்படி பேசியிருக்கலாமா என்று திமுகவினரேகூட முனுமுனுக்கிறார்கள்.