கவுன்சிலர் சீட் வேணுமா..? ரூ.30 லட்சம் கொடுத்தா 'டீல்' !! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்ராசிட்டிஸ்..
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்து இருக்கிறது.
சேலம் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான 1 மாநகராட்சி, 6 நகராட்சி மற்றும் 31 பேரூராட்சிகளில் உள்ள 699 பதவி இடங்களுக்கு 1,519 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கென 38 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் 87 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 1,519 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சேலம் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளது. இதில் கவுன்சிலர் 'சீட்' பெற திமுக, அதிமுக கட்சியினரிடையே பலத்த போட்டி ஏற்பட்டு இருக்கிறது. ஒரு கவுன்சிலர் சீட்டுக்கு இவ்வளவு லட்சம் என்று பல்வேறு பேரங்கள் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து இரு கட்சி வட்டாரங்களிலும் விசாரித்தோம். திமுக வட்டாரத்தில் பேசிய போது, திமுகவில் வேட்பாளர் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. நேர்காணலின் போதே வார்டுக்கு 30 லட்சம் ரூபாயை கட்டிய பின்னர் தான், பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறும்’ என்று கூறுகின்றனர்.
அதிமுகவில் விசாரித்த போது, தற்போது நடத்திய நேர்காணலில், வேட்பாளர் சீட் பெற 30 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின், அத்தொகையை பொறுப்பாளரிடம் கொடுத்து விட வேண்டும். ஒவ்வொரு வார்டுக்கும் வழங்கிய தலா, 20 லட்சம் ரூபாயுடன் சேர்த்து, ஒரு வார்டுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை அதிமுக செலவு செய்யும்’ என்று கூறுகின்றனர்.