தேர்தலின் போது மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்வோம் என பொய்யான வாக்குறுதியை கூறினர். இதை நம்பிய மக்கள் 46 லட்சம் பேர் நகைகளை அடகு வைத்தனர். ஆனால், அதில் 13 லட்சம் பேர் மட்டுமே தகுதியானவர் என தெரிவித்ததால் எஞ்சியுள்ளவர்கள் ரூ.12 ஆயிரம் வட்டி கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

அதிமுக வெற்றியை பொறுக்க முடியாத திமுகவினர் சதிதிட்டம் தீட்டி வேண்டுமென்ற அதிமுக வேட்பாளர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய அதிகாரிகளை மிரட்டியதால் சிலரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூர் மாநகராட்சி மற்றும் திருவலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்;- வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் முறையாக மனுதாக்கல் செய்துள்ளனர். அதிமுக வெற்றியை பொறுக்க முடியாத திமுகவினர் சதிதிட்டம் தீட்டி வேண்டுமென்ற அதிமுக வேட்பாளர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய அதிகாரிகளை மிரட்டியதால் சிலரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயக நாட்டில் தேர்தலை முறையாக சந்திக்க வேண்டும். அதைத் தவிர்த்து கோழைத்தனமாகவும், திருட்டுத்தனமாக திமுக வெற்றி பெற முயற்சி செய்கிறது. இதையெல்லாம் மக்கள் கவனிக்கிறார்கள். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 525 வாக்குறுதிகளை திமுக கூறியது. அதில் ஒன்றைக் கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதத்தில் அதன் லட்சணம் தெரிந்துவிட்டது.

ஆனால், வாக்குறுதியில் 70 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 அதன் பிறகு ரூ.2,500 வழங்கினோம். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என கூறினார். ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள மு.க.ஸ்டாலின் ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. 21 வகையான பொருட்களை வழங்குவதாக கூறினார். அவை அனைத்தும் தரமற்றது என்பதை மக்களே கூறிவிட்டார்கள்.

தேர்தலின் போது மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்வோம் என பொய்யான வாக்குறுதியை கூறினர். இதை நம்பிய மக்கள் 46 லட்சம் பேர் நகைகளை அடகு வைத்தனர். ஆனால், அதில் 13 லட்சம் பேர் மட்டுமே தகுதியானவர் என தெரிவித்ததால் எஞ்சியுள்ளவர்கள் ரூ.12 ஆயிரம் வட்டி கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களை கடனாளி ஆக்கியவர் மு.க.ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.