நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, மதுரை மாநகராட்சி 24-வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வீடு வீடாக சென்று குப்பை சேகரித்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, மதுரை மாநகராட்சி 24-வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வீடு வீடாக சென்று குப்பை சேகரித்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் குட்டிகரணம் மட்டும்தான் அடிக்கவில்லை, மற்ற அனைத்து விதமான விநோத பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். விநோதங்களுக்கும், வித்தியாசத்திற்கும் பஞ்சமிருக்காத மதுரையில் வேட்பாளர்கள் தினமும் ஒரு வித்தியாசமான பிரச்சாரத்தை கையாளுகின்றனர். அவர்களில் மதுரை மாநகராட்சி 24-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர், வாக்காளர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்கள் வீட்டில் உள்ள குப்பைகளை சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

24 வது வார்டில் குப்பை கூளமாக இருப்பதை சுட்டிக்காட்டி வரும் காலத்தில் தூய்மையான பகுதியாக மாற்றுவேன் என வாக்குறுதி கொடுத்து, தெருக்களில் உள்ள குப்பைகளையும் சுத்தம் செய்து, வாக்கு சேகரித்து வருகிறார். பகத்சிங் தெரு, இந்திரா நகர், ஹரி கிருஷ்ணா தெரு, பூந்தமல்லி நகர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் சாலைகள், தெருக்களில் கிடந்த குப்பைகளையும், வீடுகளுக்கு சென்றும் குப்பைகளை சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியான முதலே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளன.

கொரோனா அச்சம் காரணமாக, மாநில தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில், வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ள 20 நபர்கள் வரை அனுமதி, திறந்தவெளி மைதானங்களில் 1,000 நபர்கள் வரையும் அல்லது மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 50% என இதில் எது குறைவான எண்ணிக்கையோ அந்த அளவில் பரப்புரை கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளுகின்றனர்.
