திமுகவின் மூத்த தொண்டர்களுக்கு உதவிகள் வழங்க தடல் புடலாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி பிசுபிசுத்துப்போனது நிர்வாகிகளை கவலை அடையச் செய்தது.

சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு திமுக சார்பில் தடல் புடலாக விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா கால கட்டத்தில் திமுக சார்பில் பெரும்பாலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது தவிர்க்கப்பட்டு வந்தது. ஆனால் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி மட்டும் பம்பரமாக சுழன்று திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். இந்த நிலையில் தான் சென்னை கொளத்தூரில் திமுகவின் மூத்த தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

திமுக மாவட்டச் செயலாளர் சேகர் பாபு இந்த விழாவிற்கு தடல் புடலாக ஏற்பாடு செய்திருந்தார். சுமார் 300 திமுக சீனியர் தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பொற்கிழி, நிதி உதவி, மற்றும் ரேசன் பொருட்கள் என ஏராளமான நலத்திட்ட உதவிகள் கொடுக்க சேகர் பாபு ஆயத்தமாக இருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் ஸ்டாலின் பங்கேற்கும் விழா என்பதால் ஏராளமான தொண்டர்கள் வருகை தந்திருந்தனர். காலை முதலே ஊடகங்களுக்கும் இது தொடர்பான தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேச உள்ளதாகவும் திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். செல்லும் இடம் எல்லாம் ஸ்டாலினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார். சட்டப்பேரவையில் நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதிலடி திமுகவை திக்குமுக்காட வைத்தது. இதே போல் விவசாய மசோதா விவகாரத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேட்டிகள் அதிரடி சரவெடி ரகமாக இருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் வெறும் அறிக்கையில் பதில் அளிப்பதோடு ஸ்டாலின் தனது கடமை முடிந்துவிட்டதாக கருதுகிறார். இந்த நிலையில் சென்னையில் ஒரு விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதால், அங்கு அவர் எடப்பாடி பழனிசாமிக்கு தகுந்த பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் முக்கிய சேனல்கள் ஸ்டாலின் பேச்சை லைவ் செய்ய ஏற்பாடு செய்திருந்தன. விழாவிற்கு சொன்ன டைமிற்கு ஸ்டாலின் சரியாக வந்துவிட்டார். ஆனால் அவரிடம் உற்சாகம் குறைந்தே காணப்பட்டது. மேடை ஏறிய பிறகும் கூட அவர் ஏதோ சிந்தனை வயப்பட்டவராகவே காணப்பட்டார். வழக்கமான உற்சாகம் அவரிடம் இல்லை. திமுகவினர் சிலருக்கு அவர் பொற்கிழி உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து ஸ்டாலின் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. எப்படியும் ஒரு 20 நிமிடங்கள் ஸ்டாலின் பேசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

வழக்கமான வரவேற்புரையே 2 நிமிடங்கள் வரை சென்றது. ஆனால்அடுத்த ஒரே நிமிடத்தில் ஸ்டாலின் பேச்சை முடித்துக்கொண்டார். அவரது உறையில் ஒரு துளி கூட அரசியல் இல்லை. திமுகவிற்காக உழைப்பவர்களை திமுக ஒரு போதும் கைவிடாது என்பதை மட்டும் கூறிக் கொண்டு ஸ்டாலின் பேச்சை முடித்தார். விவசாய மசோதாக்கள் குறித்து பேசவில்லை, நீட் தேர்வில் முதலமைச்சருக்கு பதில் அளிக்கவில்லை. இதனால் ஊடகங்கள் மட்டும் அல்லாமல் திமுக நிர்வாகிகளும் ஏமாற்றம் அடைந்தனர். அதிலும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சேகர் பாபு, தலைவர் ஏன் அதற்குள் பேச்சை முடித்தார் என்று குழப்பத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

இதற்கு காரணம் ஸ்டாலின் ஏதோ ஒரு விஷயத்தால் அப்ஷெட்டாக இருந்தது தான் என்கிறார்கள். விழா தடல் புடலாக இருந்தாலும் ஸ்டாலின் மனதில் வேறு ஒரு விஷயம் ஓடிக் கொண்டிருந்ததால் அவர் அரசியல் பேசவில்லை என்று சொல்கிறார்கள். எது எப்படியோ நீட் தேர்வாகட்டும், விவசாய ம சோக்களாகட்டும் சுடச்சுட பேசி மக்களிடம் எடப்பாடி ரீச் ஆகி வருகிறார். ஆனால் வெறும் அறிக்கை என்பதோடு நிறுத்திக்கொள்ளும் ஸ்டாலினால் அவரது தொண்டர்களே உற்சாகம் இழந்து வருகின்றனர்.