இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச மாநிலத்தை யார் கைப்பற்றுவார்கள் ? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து இருக்கிறது.

லோக்சபாவில் உள்ள 543 இடங்களில் 80 இடங்களும், சட்டசபையில் 403 இடங்களும், ராஜ்யசபாவில் உள்ள 245 இடங்களில் 31 இடங்களும், 100 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் மேலவையையும் தவிர, 15 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட உத்தரப் பிரதேசம் நாட்டின் அரசியலில் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. 

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10-ந் தேதி தொடங்கி மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். உ.பி, உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும் பஞ்சாப் மாநிலத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் என்றும் இதுவரையிலான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஏபிபி - சிவோட்டர் புதிய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. இப்புதிய கருத்து கணிப்பின் விவரங்கள் பின்வருமாறு, ‘பாஜகவுக்கு 223-235 இடங்களும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு 145-147 இடங்களும் கிடைக்குமாம். பாஜகவுக்கு 41.5% வாக்குகளும் சமாஜ்வாதி கட்சிக்கு 33.3% வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாம். 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக வாக்கு வங்கி சதவீதம் நிலையானதாகவும் சமாஜ்வாதி கட்சிக்கு சுமார் 10% அதிகமான வாக்குகளும் கிடைக்கும். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு. 

பகுஜன் சமாஜ் கட்சிக்கு 16 இடங்கள்தான் கிடைக்க வாய்ப்புள்ளதாம். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இந்த தேர்தலில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். ஆனாலும் காங்கிரஸுக்கு அவரால் வாக்குகளை கொண்டு வந்து சேர்க்க முடியாது என்பதை இக்கருத்து கணிப்பு வெளிப்படுத்துகிறது. இந்த தேர்தலிலும் காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத், ‘சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு சென்றிருந்தேன். 

ஆளுங்கட்சிக்கு எதிராக பொதுமக்கள் இருப்பதை அறிந்து கொண்டேன். அங்கு பிரியங்கா காந்தி மேற்கொள்ளும் செயல்பாடுகள் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று நம்புகிறேன். சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மிகவும் ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கும். காங்கிரஸ் நினைத்தது நடக்கும். நாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாநில மக்களும் ஆச்சரியப்படுவார்கள். 

வெறும் விளம்பரங்களும், பிரச்சாரங்களும் செய்வதால் மட்டும் தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியாது. தற்போதைய சூழலில் 95 சதவீத வாக்காளர்கள் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தும் நபர்களாக உள்ளனர். எனவே கள நிலவரமும், ஆளுங்கட்சி செய்யும் தவறுகளும் நன்றாக அறிவார்கள். மக்களை ஏமாற்ற முடியாது. அரசியலில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் பெண்களை எப்போதும் நான் ஊக்கப்படுத்துவேன். அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தியால் காங்கிரஸ் எழுச்சி பெறும். தேர்தலில் சாதிக்கும் என்று கூறினார்.