வட மாநிலத்தவரை இழிவுபடுத்துவதா..? அமைச்சரின் பொறுப்பற்ற கருத்து.. மா.சு விற்கு உ.பி அமைச்சர் பதிலடி..
வட மாநிலத்தவர்களை இழிவுபடுத்துவது போன்ற கருத்தைத் தெரிவித்துள்ளதாக தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு உத்தரப் பிரதேச அமைச்சர் ஜிதின் பிரசாதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நடைபெற்ற நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “வட மாநிலத்தில் இருந்து வந்த மாணவர்களால் தொற்று பரவியது கண்டறிப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், கேரளா, மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தமிழகம் வரும் மாணவர்களால் கொரோனா பரவுகிறது. சென்னை , செங்கல்பட்டியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கொரோனா பாதிப்பு 22 ஆக பதிவான நிலையில் , தற்போது 100 ஐ எட்டியுள்ளது.
அடுத்தடுத்த நாள்களில் கொரோனா பரவல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அடுத்த 2 வாரங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும். தற்போது பெரும்பாலும் 99% பேருக்கு பிஏ2 கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து மக்கள் அச்சப்படதேவையில்லை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இந்நிலையில் வட மாநிலத்தவர்களால் தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பதாக அமைச்சர் கூறிய கருத்திற்கு உத்தரப் பிரதேச அமைச்சர் ஜிதின் பிரசாதா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "தொற்றுகளுக்கு மாநிலங்களோ, எல்லைகளோ தெரியாது. தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ள மிகவும் பொறுப்பற்றக் கருத்து, வட இந்தியர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: அதிமுகவை வீழ்த்த சதி.. அதிமுக பின்னுக்கு தள்ளப்படுவதாக மறைமுகப் பிரச்சாரம்.. பாஜக மீது பாய்ந்தாரா பொன்னையன்.??