அதிமுகவை வீழ்த்த சதி.. அதிமுக பின்னுக்கு தள்ளப்படுவதாக மறைமுகப் பிரச்சாரம்.. பாஜக மீது பாய்ந்தாரா பொன்னையன்.??
அதிமுக பின்னுக்கு தள்ள படுவதாக தமிழ்நாட்டில் மறைமுக பிரச்சாரம் நடக்கிறது எனவே அதிமுகவினர் இதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பின்னுக்கு தள்ள படுவதாக தமிழ்நாட்டில் மறைமுக பிரச்சாரம் நடக்கிறது எனவே அதிமுகவினர் இதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு மாநில உரிமை பிரச்சினைகளில் பாஜக தமிழகத்துக்கு ஆதரவாக செயல்படவில்லை என்றும், பொன்னையன் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வருகிறது. ஆனால் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது இரண்டு கட்சிகளும் தனித்து தேர்தலை சந்தித்தன. ஆனால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்தே தேர்தலை சந்திக்க கூடும் என இரு கட்சியினர் இடையே நம்பிக்கை இருந்து வருகிறது. பிதரமர் மோடி சென்னை வந்திருந்தபோதுகூட எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்றார் எதிர்க் கட்சி சார்பிலும் தமிழகத்திற்கு தேவையான கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் பிரதமரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இன்ன பிற தலைவர்களும் அதிமுக தலைவர்களை ஆதரித்தே பேசிவருகின்றனர்.அதே நேரத்தில் அதிமுகவே எதிர் கட்சி என்றாலும்கூட தாங்களே தமிழகத்தில் வலிமையான எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை கட்டமைக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுகவை காட்டிலும் ஆளுங்கட்சியான திமுகவை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மீது அண்ணாமலை பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். பாஜக சார்பில் ஆளும் அதிமுகவுக்கு எதிராக அடுத்தடுத்துப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் பரவலாக்க பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர், சென்னையின் பல்வேறு இடங்களில் அதிமுக வேட்பாளர்களை மூன்றாவது இடத்திற்கு தள்ளி பாஜக வேட்பாளர்கள் இரண்டாவது இடம் பெற்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தமிழ்நாட்டு அரசியல் சூழல் திமுக பாஜகவை மையப்படுத்தியே இருக்குமென பேசி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்றும் சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும் அண்ணாமலை கூறிவருகிறார். அண்ணாமலை மற்றும் பாஜகவினிரின் செயல்பாடு அதிமுகவினர் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் தங்களது கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என முயலும், அதைதான் பாஜகவும் செய்து வருகிறது. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரையில் 100 இடங்களை வெல்வோம்,200 இடங்களை வெல்லும் என பாஜகவினர் பேசலாம் ஆனால் அதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படாது, பாஜகவின் கனவு தமிழகத்தில் பலிக்காது. தேசிய கட்சிகளான காங்கிரஸ் பாஜகவை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறியுள்ளார். அதேநேரத்தில் புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், அதிமுக நிர்வாகிகள் வேலுமணி. தங்கமணி, சி. விஜயபாஸ்கர், சிவி சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பாஜகவை காட்டமாக பேசியுள்ளார்.
அதிமுக பின்னுக்கு தள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாட்டில் மறைமுகமாக பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் அதிமுகவினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பாஜக குரல் கொடுப்பதில்லை, காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு, பாலாறு விவகாரங்களில் தமிழ்நாடு பாஜக மக்களுக்காக குரல் எழுப்பவில்லை, பாஜகவின் பிரச்சாரங்களுக்கு எதிராக அதிமுகவின் சமூக ஊடகங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதிமுகவுக்கு எதிரான பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என அவர் அவர் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. பொன்னையனின் இந்த பேச்சு அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.