இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு வந்து, தன் வாதங்கள் மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்;- மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி, பெரும் அதிர்ச்சியைத் தந்தது. தலைசிறந்த நாடாளுமன்றவாதியான அவர், 1977 பொதுத் தேர்தலில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு வந்து, தன் வாதங்கள் மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தார். சமூக நீதியின் காவலரான வி.பி.சிங் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்து, மைய மண்டபத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய படத்தைத் திறந்து வைப்பதற்கும் காரணமாக இருந்தார்.

ஈழத்தமிழர்களின் துயரத்தில் பங்கேற்று, அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசினார். தனித் தமிழ் ஈழமே தீர்வு என்றும் கூறினார். சென்னை மெரினா கடற்கரையில் மே-17 இயக்கம் நடத்திய ஈழத்தமிழர்கள் புகழஞ்சலி நிகழ்ச்சியில் நான் அழைத்ததன்பேரில் வந்து கலந்துகொண்டார். நான் அவரிடம் உயர்ந்த நட்பு கொண்டிருந்தேன். அழகிய தோற்றமும், அறிவாற்றலும் கொண்ட அவர், சமூக நீதி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வு ஆகிய உன்னத இலட்சியங்களுக்காகவே வாழ்ந்தார்.

இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, நாட்டுக்கு அரிய சேவை செய்ய வேண்டிய அந்த உத்தமர் மறைந்த செய்தி மனதை வாள் கொண்டு பிளக்கிறது. அவரது மறைவினால் வேதனையில் துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், லோக் ஜனசக்தி கட்சியினருக்கும் என்னுடைய ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன என வைகோ பதிவிட்டுள்ளார்.