மத்திய அமைச்சர் சதானந்த கவுடா திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய ரசாயனத் துறை அமைச்கராக இருப்பவர் சதானந்த கவுடா. நேற்று இவர் சிவமொக்காவில்  நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்றார். இதையடுத்து அவர் பெங்களூருக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் மதிய உணவிற்காக அவரது காரை சித்ரதுா்கா எனும் பகுதியில் நிறுத்தினார். அப்போது காரில் இருந்து இறங்கியபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். 

உடனடியாக அவரை பசவேஸ்வராவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சர்க்கரை அளவு குறைந்திருப்பதாக தெரிவித்தனர். பின்னர், அடுத்த ஒரு மணிநேரத்தில் அவருக்கு மயக்கம் தெளிந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.