கொரோனா எதிரொலியாக உலக பொருளாதாரமே முடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கொரோனா சமூக தொற்றாக மாறுவதை தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், சமூக, பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. பொருளாதார வீழ்ச்சி கடுமையாக ஏற்பட்டிருப்பதுடன், ஏழை, எளிய மக்கள் வருவாயையும் வாழ்வாதாரத்தையும் இழந்து கடும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதுடன், கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன. கொரோனாவை எதிர்கொள்ளவே, மத்திய, மாநில அரசுகள் நாட்டு மக்களின் நிதியுதவியை எதிர்நோக்கிய நிலையில், ஏழை, எளிய மக்களை கஷ்டத்திலிருந்து மீட்டெடுப்பது, பொருளாதார வீழ்ச்சியை சரிகட்டி அதிலிருந்து மீள்வது என சவால்கள் கடுமையாக உள்ளன. 

இந்நிலையில், அடுத்த ஓராண்டுக்கு பிரதமர் உட்பட அனைத்து எம்பிக்களின் ஊதியத்திலும் 30% குறைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல குடியரசுத்தலைவர், குடியரசு துணை தலைவர், ஆளுநர்கள் ஆகியோரின் ஊதியத்திலும் அடுத்த ஓராண்டுக்கு 30% குறைத்து வழங்கப்படும். ஓய்வுபெற்ற எம்பிக்களின் பென்சனிலும் 30% குறைக்கப்படுகிறது.  அதேபோல அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியும் வழங்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இதன்மூலம் அரசுக்கு ரூ.7900 கோடி மிச்சமாகும் என தெரிவித்துள்ளார்.