திமுக பிரமுகர் ஒருவர் பெயரில் இ பாஸ் பெற்றதுடன் பிரச்சனை ஏற்பட்ட சோதனைச்சாவடிகளில் தான் மீடியா பெர்சன் என்று கூறி தூத்துக்குடி வரை உதயநிதி ஸ்டாலின் சென்று வந்துள்ளது தெரியவந்துள்ளது.

கனிமொழிக்கு போட்டியாக சாத்தான்குளம் சென்று வந்து தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். சென்னையில் கொரோனா மிகத் தீவிரமாக பரவி வரும் சூழலில் அங்கிருந்து தூத்துக்குடி வரை எவ்வித சரியான காரணமும் இன்றி சாத்தான்குளம் சென்று வந்தது தான் உதயநிதி சிக்கலில் சிக்க காரணம். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. அதிலும் சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. திருமணம், உறவினர் இறப்பு மற்றும் மருத்தவ காரணங்களை தவிர வேறு எதற்கும் சென்னையில் இருந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிலும் சென்னையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டில் இருந்து 2கிமீ சுற்றளவிற்குள் தான் செல்ல வேண்டும். வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என்று கண்டிப்பான விதிகள் உள்ளன. இதனை மீறி வெளியே வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் விலை உயர்ந்த பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற கார்கள் கூட பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த சூழலில் தான் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக சாத்தான்குளம் சென்று திரும்பியுள்ளார்.

சாமான்ய மக்கள் உண்மையான தேவை இருந்தும் கூட இ பாஸ் இல்லாமல் சென்னையில் சிக்கித் தவிக்கின்றனர். நேற்று கூட காஞ்சிபுரத்தில் இருந்து அருகே உள்ள சென்னைக்கு மனைவியின் பிரசவத்திற்கு வர இ பாஸ் கிடைக்கவில்லை என்கிற ஏக்கத்தில் கணவர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக உதயநிதி சாத்தான்குளம் செல்ல இ பாஸ் கொடுத்தது எப்படி என்கிற கேள்வி எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் சீமான் இது குறித்து அரசு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு நான் நேரடியாக கேட்டுவிட்டேன், உதயநிதி என்கிற பெயருக்கு எந்த இ பாசும் கொடுக்கவில்லை என்று கூறிவிட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால் முறையாக இ பாஸ் பெற்றே சென்றதாக உதயநிதி தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே நாம் விசாரித்த போது சாத்தான்குளம் திமுக பிரமுகர் ஒருவர் பெயரில் இ பாஸ் பெறப்பட்டு அதனை பயன்படுத்தி உதயநிதி சென்றது தெரியவந்தது.

மேலும் விருதுநகரை தாண்டிச் செல்லும் போது சோதனைச் சாவடியில் எதற்கு உதயநிதி இருக்கிறார்? அவருக்கும் சாத்தான்குளத்திற்கும் என்ன சம்பந்தம் என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு உதயநிதி தான் மீடியா பெர்சன் என்று கூறி தனது அடையாள அட்டையை காட்டியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி, முரசொலியின் நிர்வாகி என்கிற அடிப்படையில் ஊடக அடையாள அட்டை உதயநிதிக்கு இருக்கிறது. இதனை காட்டி, ஊரடங்கில் ஊடகத்தினருக்கு விதி விலக்கு இருக்கிறது என்பதை அதிகாரிகளிடம் உதயநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்படி வேறு ஒருவர் பெயரில் பெற்றுள்ள இ பாஸ் மற்றும் மீடியா பெர்சன் எனும் ஐடி கார்டை பயன்படுத்தியே உதயநிதி சாத்தான்குளம் வரை சென்றுள்ளார். ஆனால் மீடியா ஐடி கார்டை உதயநிதி தவறாக பயன்படுத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஊடகம் தொடர்பான பணிக்கு செல்லும் போது மட்டுமே அதனை பயன்படுத்த வேண்டும். ஆனால் அரசியல் காரணத்திற்காக உதயநிதி இந்த கார்டை பயன்படுத்தியுள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது. எனவே அரசு அங்கீகாரத்துடன் கூடிய உதயநிதியின் ஐடி கார்டை பறிக்க வேண்டும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறையிடம் புகார் அளிக்க ஒரு குரூப் தயாராகி வருவதாக சொல்கிறார்கள். இதே போல் மத்திய அரசின் ஊடக அங்கீகார அட்டையும் உதயநிதியிடம் உள்ளதாகவும் கூறுகிறார்கள்.