தமிழக அமைச்சரவையில் கால்நடைதுறை அமைச்சராக உள்ள உடுமலை ராதாகிருஷ்ணன் திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் அவரின் மாவட்ட செயலாளர் பதவி இரண்டு நாட்களுக்கு முன்பு பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டதால்  உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் 6 பஸ்களில் நேற்று சென்னை வந்தனர்.
 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அருகில் காலையில் திரண்டனர். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக கட்சி அலுவலகத்திற்கு செல்ல முயன்றனர். 

அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அலுவலக மெயின்  கேட்டை மூடியதால் அதன் முன்பு நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் உடுமலை ராதாகிருஷ்ணனை மீண்டும் மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவரை எப்படி மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கலாம். கஷ்டமான நேரங்களில் கட்சியில் இருந்தவர் அவர். கட்சியை வளர்த்தார் என தெரிவித்தனர்.

இதனால், அதிமுக தலைமை அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு சிலர் மட்டும் அதிமுக தலைமை அலுவலகத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை அளித்தனர். அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.