பிரதமர் நரேந்திர மோடியையே கேடி என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டெட்பாடி என்று சகட்டுமேனிக்கு பேசும் உதயநிதி அவரது பெரியப்பா மு.க.அழகிரி பெயரை சொன்னால் மட்டும் சைலன்ட் ஆகும் மர்மம் என்ன என்று பேச்சு எழுந்துள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டங்களில் பிசியாக இருக்கும் நிலையில் அவரது மகனும் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளியாக பிரச்சாரம் செய்து வருகிறார். வேன் பிரச்சாரம், மேடைப் பிரச்சாரம் என உதயநிதி செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல கூட்டம் கூடுகிறது. அவரது பேச்சு ஸ்டைல் மிகவும் இயல்பாக இருப்பதால் கைதட்டுகளும் அள்ளுகிறது. அதிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோருக்கு பட்டப்பெயர் வைத்து உதயநிதி பேசும் பேச்சுகள் அதிரடி சரவெடி ரகம்.

ஆனாலும் ஆங்காங்கே எல்லை மீறி உதயநிதி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாசுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்தது, மூப்பனார் பெயரிலான மேடையில் அவர் பெயரை மறைக்கச் சொன்னது, சசிகலா கால்களுக்கு இடையே கூட எடப்பாடி சென்றுவிடுவார் என்று ஆபாசமாக பேசியது என சர்ச்சைகளுக்கும் உதயநிதி தரப்பில் பஞ்சம் வைக்கப்படுவதில்லை. ஆனாலும் கூட அடுத்தடுத்த கூட்டங்களில் இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும், விளக்கம் அளிக்கும் வகையிலும் நன்றாக சமாளிக்கவும் செய்கிறார் உதயநிதி.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மோடியை மிக கடுமையாக விமர்சித்து வந்தார் உதயநிதி. இது தொடர்பாக ஸ்டாலினிடம் பாஜக தரப்பு பேசியதை தொடர்ந்து உதயநிதியை அழைத்து மோடிக்கு எதிரான விமர்சனத்தை குறைத்துக் கொள்ளுமாறு ஸ்டாலினே கூறியதாக தகவல்கள் வெளியாகின. அந்த அளவிற்கு உதயநிதியின் பிரச்சாரம் வலுவாகவே இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக உதயநிதி வரம்பு மீறுவதாக புகார் எழுந்துள்ளது. விஷயத்தை பேசாமல் சர்ச்சைகளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், திமுகவின் 3ம் தர பேச்சாளர் போல இரட்டை அர்த்தங்களிலும் பேசுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும் முதலமைச்சர் போன்றோரை விமர்சிக்கும் போது அரசியல் நாகரீகத்தை உதயநிதி கடைபிடிப்பதில்லை என்றும் கூறப்படுகின்றன. இந்த நிலையில் கள்ளிக்குடியில் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மு.க.அழகிரி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. மற்ற கேள்விகளுக்கு எல்லாம் வானத்திற்கும் பூமிக்குமாக துள்ளிக்குதித்த பதில் அளித்த உதயநிதி, அழகிரி பெயரை கேட்டதும் அதிர்ந்துவிட்டார் என்றே சொல்லலாம். அதற்கு ஏதேதோ சொல்லி உதயநிதி சமாளிக்க செய்தியாளர்களும் விடாமல் கேள்விக்கணைகளை விடுத்தனர்.

அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாமல் திணறிய உதயநிதி ஒரு கட்டத்தில் அழகிரி மதுரையில் என்ன பேசினார் என்றே எனக்கு தெரியாது என்று ஒரே போடு போட்டுவிட்டார். இதன் மூலம் அழகிரி என்றால் உதயநிதிக்கு கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது செய்தியாளர்கள் நமட்டுச் சிரிப்பில் பேசிச் சென்றது நாம் காதுகளில் விழுந்தது. பிறகு என்னதான் அரசியலில் எதிர் முகாமில் இருந்தாலும் மு.க.அழகிரி உதயநிதிக்கு பெரியப்பா என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.