Udhayanidhi Stalin has retaliated to see the funding of the deficit
எந்த நிதி வந்தாலும் சமாளிப்போம்ன்னு சொன்ன அமைச்சர் ஜெயக்குமாருக்கு அவர்கள் முதலில் போக்குவரத்து துறையில் பற்றாக்குறையாக உள்ள நிதியை பார்க்கட்டும் என பதிலடி கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், செயல் தலைவர் ஸ்டாலின் மகனுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் முதலில் திரைப்படங்களை தயாரித்து வந்தார்.
அதன் பிறகு நடிகராக அவதாரமெடுத்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் நடிகராகி பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்கி பிறந்த நாளின் போது பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தனது தந்தைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்றார். இப்போராட்டத்தின்போது உதயநிதி முன்னிலைபடுத்தப்பட்டார். அப்போதே அவர் அரசியலுக்கு வருவார் என பரவலாக பேசப்பட்டது.
வரும் சட்டசபைத் தேர்தலில் இருந்து நேரடி அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். அதற்கு முன் தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றத்துக்கு ஆதரவாக புதிய அமைப்புகளை தொடங்கி வருகிறார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகை குறித்து பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் எந்த நிதியாக இருந்தாலும் நாங்கள் சமாளிப்போம் எனவும் அரசியல் என்ற சமுத்திரத்தில் எல்லோராலும் கரை சேர முடியாது எனவும் விமர்சித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்த உதயநிதி, முதலில் போக்குவரத்து துறையில் பற்றாக்குறையாக உள்ள நிதியை பார்க்கட்டும் எனவும் தொண்டர்களுடன் பயணிப்பதே எனது அரசியல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
