வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து வேலூரில் வாக்கு சேகரித்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் அதிமுகவையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் பேசிய அவர், ‘’இந்தியாவிலேயே இல்லாத மோடி, வெளிநாட்டு வாழ் இந்திய பிரதமர். தேர்தலுக்கு மட்டும் மக்களை சந்திக்கும் ஆட்கள் கிடையாது. மக்களோடு மக்களாக மக்கள் குறைகளை அறிந்து மக்கள் சேவகர்களாக இருப்பவர்கள் திமுகவினர். இது சாதாரண தேர்தல் இல்லை. இந்தியாவுக்கான இரண்டாவது சுதந்திர போர். மோடியின் ஆட்சியில் இருந்து இந்தியா விடைபெற வேண்டும். 2014-ல் ஆட்சிக்கு வந்த மோடி, சொன்னதை ஏதாவது செய்திருக்கிறாரா? அவர் இந்தியாவிலேயே இருப்பதில்லை. 

வெளிநாட்டு வாழ் இந்திய பிரதமர் மோடி. கடந்த நான்கரை ஆண்டில் 55 நாடுகளுக்கு 48 முறை சென்று வந்துள்ளார். அதிலும், தமிழ்நாட்டுக்கு வருவதேயில்லை. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதாக மத்திய அமைச்சர்கள் பொய் கூறினார்கள். கடைசியில் விலக்கு இல்லை என கூறிய நிர்மலா சீதாராமன், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். அந்த தீர்மான நகலும் காணவில்லை என்கின்றனர். திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் வில்லன் மோடிதான். 

வில்லனுடன் 2 பேர் அடியாட்கள் வருவார்கள். அவர்கள்தான் ஓபிஎஸ், ஈபிஎஸ். அதேபோல், அன்புமணி காமெடி நடிகராக உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடன் ரத்து, சிலிண்டர் விலை குறைப்பு, மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ் வழங்கப்படும். இந்தியாவிலே ஊழல் மிகுந்த மாநிலம் உத்திரபிரதேசம், தமிழ்நாட்டுக்கு மூன்றாமிடம். அம்மா வழியில் ஆட்சி என்றவர்களின் ஆட்சியில் பெண்களுக்கு பாதிப்பில்லையாம்.

அ.தி.மு.க என்பது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அல்ல, அடல்ஸ் ஒன்லி திராவிட முன்னேற்ற கழகம். உதாரணம் நிர்மலாதேவி, ஜெயகுமார் விவகாரம் தற்போது கொடூரமான பொள்ளாச்சி சம்பவம்.  அம்மா வழியில் ஆட்சி என கூறி பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக உள்ளது’’ என அவர் கூறினார்.