தனது 41-வது பிறந்தநாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் மனைவி கிருத்திகா, சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் ‘அதுக்குள்ள தம்பிக்கு 41 வயசு ஆயிடுச்சா? என்று ஆச்சரியம் தொனிக்கவே பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த்னர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், தனது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் துவக்கத்தில் திரைத்துறையில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்த 2008 விஜயின் ‘குருவி’ படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார். 

பின்னர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, தற்போது  பத்து படங்கள் வரை நடித்து முடித்துள்ளார். இயக்குநர் சீனு ராமாசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ படம் அடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. சமீப காலமாக அரசியல் மேடைகள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். விரைவில் அவர் அரசியலுக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இன்று 41-வது வயதில் உதயநிதி ஸ்டாலின் அடியெடுத்து வைக்கிறார். அதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் அவர் மரியாதை செலுத்தினார். அப்போது அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் இவரது பிறந்த நாளுக்கு ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் அவரது ரசிகர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கருணாநிதி மறைவாலும், கஜா புயலில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் துயரத்தில் இருந்து வருகின்றனர். ஆகையால் இந்த வருடம் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்பணி மன்றம் சார்பில் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.