மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக சார்பில் முதற்கட்ட பிரச்சாரமாக ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் நடைபெறும் இக்கூட்டங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டு மக்களின் குறைகளைக் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இன்று நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டங்களில் ஸ்டாலின் மகன் உதயநிதி கலந்துகொண்டு பேசவுள்ளார். இந்தச் செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து திமுகவில் எந்தப் பதவியிலும் இல்லாத உதயநிதி, ஊராட்சி சபைக் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக எப்படி கலந்து கொள்ளலாம்? என சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதுகுறித்த  ட்வீட் போட்ட பிஜேபி இளைஞரணியை சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா என்பவர், “முரசொலி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பதவியைத் தாண்டி திமுகவில் எந்தப் பொறுப்பிலும் உதயநிதி இல்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த உதயநிதி, “Bro, இப்படி புலம்புவதற்குப் பதிலாக தைரியம் இருந்தால் எங்களோடு ஊராட்சி சபை கூட்டத்துக்கு வந்து மக்களை நேரடியாகச் சந்திக்கலாமே” , “ மக்களைச் சந்திக்க எந்த பதவியும் அவசியம் இல்லை” என்றும் விளக்கமளித்துள்ளார்.