திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதியை சந்தித்துவிட வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தவியாய் தவித்து வரும் நிலையில் அதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திமுக இளைஞர் அணிச்செயலாளராக உதயநிதி தேர்வு செய்யப்பட்ட பிறகு அககட்சி நிர்வாகிகள் இடையே ஒரு குழப்பம் இருந்தது. உதயநிதியை சென்று சந்திக்கலாமா? வாழ்த்து கூறலாமா? இல்லை காத்திருக்க வேண்டுமா? என்பது தான் அது. இதனால் பலரும் தவித்துக் கொண்டிருந்த நிலையில் சிலர் தலைமை கழகத்தை தொடர்பு கொண்டு உதயநிதியை சந்திக்க வேண்டும், வாழ்த்த வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டனர்.

 

 தினந்தோறும் இப்படி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அழைப்புகள் வந்த நிலையில் உதயநிதி சந்திப்பிற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் என்கிற ரீதியில் நிர்வாகிகள் உதயநிதியை சந்திக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. துவக்கத்தில் உதயநிதி மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு ஸ்டாலின் தடை போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

 

மேலும், மாவட்டச் செயலாளர்களை ஸ்டாலினே நேரில் அழைத்து தம்பியை பார்த்துவிடுங்கள் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதன் பிறகே சென்னையில் உதயநிதி ஸ்டாலின் – நிர்வாகிகள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல்கட்டமாக சென்னை நிர்வாகிகளை உதயநிதி சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளர் முதல் வார்டு பிரதிநிதிவரை அனைவரும் நேற்று உதயநிதியை காண படையெடுத்தனர்.

 

சால்வை சகிதமாக வந்த நிர்வாகிகள் உதயநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடன் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சென்னை முன்னாள் மேயர் மா.சுப்ரமணியம் செய்திருந்தார். சுமார் 1 மணி நேரம் வரை இந்த நிர்வாகிகள் சந்திப்பு நீடித்தது. பின்னர் முக்கிய நிர்வாகிகளை மட்டும் அழைத்து உதயநிதி கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். 

மேலும் சென்னையின் தண்ணீர் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் குறித்தெல்லாம் உதயநிதி கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டதாகவும் சொல்கிறார்கள். இளைஞர் அணி நிர்வாகிகள் மட்டும் அல்லாமல் திமுகவின் வெவ்வேறு அணி நிர்வாகிகளும் உதயநிதியை சந்திக்க ஆர்வத்துடன் வருகின்றனர். இதில் சிலர் பரிந்துரை கடிதங்களுடன் உதயநிதியை சந்திப்பது தான் டர்னிங் பாய்ன்ட்.