திருவாரூர் தொகுதியில் உதயநிதியை களம் இறக்கலாம் என்கிற யோசனையை மு.க.ஸ்டாலின் திடீரென கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலைஞர் மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. கலைஞரின் சொந்த மாவட்டத்தில் உள்ள திருவாரூர் தொகுதியில் தான் அவர் கடைசியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிலும் தமிழகத்தில் வேறு எந்த வேட்பாளரும் பெறாத வாக்கு வித்தியாசத்தில் கலைஞர் வெற்றி பெற்று இருந்தார். இதனால் திருவாரூர் தி.மு.கவின் கோட்டை என்று கருதப்படுகிறது.

தற்போது கலைஞர் மறைந்துவிட்டதால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. விரைவில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஸ்டாலின் தனது வாரிசான உதயநிதியை களம் இறக்குவார் என்று கூறப்பட்டது. மேலும் தொகுதி நிலவரம் குறித்து ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் நேரடியாகவே சென்று ஆய்வு செய்ததாகவும் கூறப்பட்டது. ஸ்டாலினும் கூட தனது மகனை திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ ஆக்கிவிடலாம் என்றே கருதிக் கொண்டிருந்தார்.

ஆனால் தி.மு.கவில் தற்போதுள்ள சூழலில் தனது குடும்பத்தை சேர்ந்த ஒருவரை அதிலும் தனது மகனை கட்சியில் கூட முக்கிய பொறுப்பிற்கு கொண்டு வர முடியாத சூழல் உள்ளதாக ஸ்டாலின் கருதுகிறார். ஏனென்றால் கலைஞர் மறைவை தொடர்ந்து ஸ்டாலின் கட்சியை எப்படி வழி நடத்திச் செல்லப்போகிறார் என்று அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த நிலையில் தனது மகனை நேரடிய அரசியலுக்கு கொண்டு வருவதன் மூலம் வாரி அரசியல் என்கிற நெகடிவ் இமேஜ் தன் மீது விழும் என்று ஸ்டாலின் தயங்குகிறார்.

மேலும் தற்போது தான் கட்சி நிகழ்ச்சிகளிலும் உதயநிதி பங்கேற்க ஆரம்பித்துள்ளார். எனவே அவருக்கு உடனடியாக சீட் கொடுக்கப்பட்டால் ஊடகங்களில் மிகப்பெரிய விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். எனவே உதயநிதிக்கு முதலில் கட்சியில் ஒரு பதவியை கொடுத்துவிட்டு பின்னர் தேர்தல் அரசியலுக்கு கொண்டு வரலாம் என்கிற முடிவுக்கு ஸ்டாலின் வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே திருவாரூர் தொகுதிக்கு வேறு பலமான வேட்பாளரை தேடும் பணி தொடங்கியுள்ளது.