ஸ்டாலினை ஆயிரம்தான் நேசித்தாலும் தி.மு.க.வின் முழு அதிகாரமும் தன்னிடம் தான் இருக்கவேண்டும் என்பதில் குறியாக இருந்தார்தான் கருணாநிதி. ஸ்டாலினுக்காக தன் போர்வாள் வைகோவை இழந்தார், பரிதி இளம்வழுதியை துறந்தார் இப்படி நிறைய உதாரணங்கள். ஆனாலும் எக்காரணத்தை முன்னிட்டும் தன் சுய நினைவாற்றல் மற்றும் நகரும் சக்தி இருக்கும் வரை தி.மு.க. மீதான தன் பிடியை மட்டும் ஸ்டாலினுக்காக விட்டுக் கொடுக்கவில்லை அவர். 

கருணாநிதி இருந்தபோதே ஸ்டாலினை அவ்வளவாக ரசிக்காதவர்கள் தி.மு.க.வின் தலைமை லெவலில் கோலோச்சிக் கொண்டுதான் இருந்தனர், கருணாநிதியின் ஆசியில். ஸ்டாலினும் அவர்களை பெரிதாய் மதித்ததில்லை என்பது இன்னொரு கதை. ஆனால் கருணாநிதி இறந்து, தி.மு.க. என்றால் ஸ்டாலின் என்றான நிலையிலும் கூட அவரோடு நூறு சதவீத கருத்தொற்றுமை காட்டாமல்தான் அவர்களில் சில நிர்வாகிகள் இன்றும் தொடர்கிறார்கள்.

  

அவர்களில் முக்கியமானவர் ஜெ., அன்பழகன். மேற்கு சென்னை மாவட்ட செயலாளர், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. என இரண்டு அதிகாரங்களுடனும், அபரிமிதமான பண செல்வாக்குடனும் சென்னை தி.மு.க.வில் வலம் வருகிறார். ஸ்டாலின் மீது மரியாதை உண்டே தவிர பயமெல்லாம் இவருக்கு கிடையவே கிடையாது. அவையடக்கம் என்றெல்லாம் யோசிக்காமல், ஸ்டாலினின் பக்கம் நின்றபடி பொன்முடியை இவர் வறுத்தெடுத்ததெல்லாம் இதற்கான ஹாட் உதாரணங்கள். 

ஸ்டாலினையே விரும்பாத இவர், தி.மு.க.வில் அடுத்து தலையெடுத்து வரும் உதயநிதியை எப்படி ஏற்றுக் கொள்வார்? ஜெ.அன்பழகன் போல் மாநிலம் முழுக்கவே முரண்டு பிடிக்கும் பேர்வழிகள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்களே! இவர்கள் உதயநிதியின் உள்நுழைகையை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? என்று தலைமைக்கு ஒரு தயக்கம் இருந்தது. இந்நிலையில் ‘உதயநிதியின் அரசியல் நுழைவு’ பற்றி வாய் திறந்திருக்கும் அன்பழகன், கருணாநிதியின் குடும்பத்தில் முத்து, ஸ்டாலின், அழகிரி என்று பலர் இருந்தாலும் கூட ஸ்டாலினால் மட்டுமே கட்சியின் தலைவர் பதவிக்கு வர முடிந்தது. 
 
காரணம் அவருடைய உழைப்பு அப்படி. உதயநிதியும் அப்படி இறங்கி உழைத்து, தொண்டர்களின் அன்பைப் பெற்றால் அவருக்கும் அரசியலில் இடமுண்டு. இதை வாரிசு அரசியல் என்று சொல்லிட முடியாது.” என்று பாஸிடீவாக கூறியுள்ளார். இதனால் ஸ்டாலின் குளிர்ந்து போயிருக்கிறார். அதேவேளையில் “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது கருணாநிதி எங்களிடம் ‘ஒரு போதும் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்காதீங்க!’ அப்படின்னு சொன்னார். 

அதனால்தான் நாங்கள் ஜனநாயக ரீதியில் இந்த ஆட்சியை வீழ்த்த போராடுறோம்.” என்று மாஜி தலைவரிடம் தனக்கும் இருந்த நெருக்கத்தை காட்டி பெருமை பேசியிருக்கிறார். இதை ஸ்டாலினுக்கு நெருக்கமான சிலர் ‘ஆமா! தலைவர் கலைஞர் என்ன இவரை கூப்பிட்டா இதையெல்லாம் சொன்னாரு? தலைவர் நீங்க இருக்கையில இந்த வாலெல்லாம் ஏன் ஆடுது?’ என்று வளமாக எண்ணெய்யை ஊற்றி இருக்கிறார்கள். இதில்தான் ஸ்டாலின் கொஞ்சம் கடுப்ஸாம்.