பதவி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் அதிருப்தியில் இருந்து கனிமொழியை நேரில் சந்தித்து சமாதானம் செய்துள்ளார் கனிமொழி.

அனைவரும் எதிர்பார்த்த வகையில் தான் திமுக இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து திமுக பிரபலங்கள் அனைவரும் உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சீனியர் தலைவர்கள் அறிவாலயம் வந்து உதயநிதிக்கு பொன்னாடை போர்த்திச் சென்றனர். ஆனால் கனிமொழி மட்டும் இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்து வந்தார்.

திமுகவில் மிகப்பெரிய பதவியில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அப்படி இருக்கையில் கனிமொழி அந்த நபருக்கு நேரில் சென்று வாழ்த்து சொல்லியிருக்க வேண்டும். ஆனால் செல்லவில்லை. ஏன் என்று விசாரித்த போது மேடம் டெல்லியில் இருக்கிறார்கள் என்று பதில் வந்தது. அப்படி என்றால் ட்விட்டரில் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கலாமே என்று கேள்வி எழுப்பிய போது கனிமொழி தரப்பில் பதில் இல்லை.

இதுகுறித்து விசாரித்த போது உதயநிதிக்கு புதிய பதவி கொடுக்கும் விஷயத்தை ஸ்டாலின் கடைசி வரை கனிமொழியிடம் கூறவே இல்லை என்கிறார்கள். துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்ட தனக்கு நெருக்கமான ஒரு சிலரிடம் மட்டுமே இது குறித்து ஸ்டாலின் விவாதித்துள்ளார். பிறகு பொதுச் செயலாளர் கையெழுத்தை பெற்று மகனை இளைஞர் அணி செயலாளராக அறிவித்துவிட்டார் ஸ்டாலின். உதயநிதி இளைஞர் அணிச் செயலாளர் ஆவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கனிமொழி கருதுகிறார். ஆனால் இந்த விவகாரம் குறித்து தன்னிடம் ஒரு வார்த்தையை அண்ணன் தெரிவித்து இருக்கலாம். அவரது மகன் உயரிய பதவிக்கு வருவதை நான் தொலைக்காட்சிகளில் பார்த்து தான் தெரிந்து கொள்ளவேண்டுமா என்று நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டுள்ளார் கனிமொழி.

இந்த தகவல் உதயநிதி காதுகளுக்கு எட்டியுள்ளது. உடனடியாக கனிமொழியை தொலைபேசியில் அழைத்த உதயநிதி அத்தை உங்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை கேட்டு பூரித்துப் போன கனிமொழி சென்னை வந்ததும் உடனடியாக உதயநிதியை பார்க்க புறப்பட்டுள்ளார். ஆனால் நான் அங்கு வருகிறேன் என்று கூறிய உதயநிதி சிஐடி காலனியில் கனிமொழி வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றுள்ளார்.

இது கனிமொழி தேவையில்லாமல் எதுவும் பேசி விடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிறார்கள். ஏற்கனவே கனிமொழி கலைஞர் இருக்கும் போது ஸ்டாலினின் கெடுபிடிகளை மீறித்தான் அரசியல் செய்து வந்தார். தற்போது தான் எம்பியாகி ஓரளவிற்கு ஸ்டாண்டான நிலையில் உதயநிதி வந்துள்ளதால் அவரையும் கனிமொழி சமாளித்தாகவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.